திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த மாதம் தமிழகம் மற்றும் ஆந்திராவில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. அப்போது வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் நிரம்பியதால், இலவச தரிசன பக்தர்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் 48 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 77,326 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 38,742 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ4.36 கோடியை காணிக்கையாக செலுத்தினர். கோயிலில் நேற்று நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 30 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.