குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியோடு முடிவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜூலை 18-ம் தேதி இதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. 233 மாநிலங்களவை எம்.பி-க்கள், 543 மக்களவை எம்.பி-க்கள், இந்தியா முழுவதுமிருக்கும் 4,033 எம்.எல்.ஏ-க்களின் வாக்குகளின் மதிப்புகளின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு மதிப்பில், பா.ஜ.க கூட்டணியைவிட, அவர்களுடன் கூட்டணியில் இல்லாத எதிர்க்கட்சிகளின் கைகள் சற்று ஓங்கியிருக்கின்றன. எனவே, பா.ஜ.க வேட்பாளருக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுவருகின்றன. எதிர்க்கட்சிகளின் சாய்ஸாக இருந்த சரத் பவார், `குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிட முடியாது’ என்று மறுத்துவிட்டார். எனவே, வேறு வலுவான வேட்பாளரைத் தேடும் பணியில் எதிர்க்கட்சிகள் இறங்கியிருக்கின்றன. இந்த நிலையில், பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யார் முன்னிறுத்துப்படுவார் என்கிற எதிர்பார்ப்புகள் உச்சம் தொட்டிருக்கின்றன. இதற்காக பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள், சிலரின் பெயர்களைக் கொண்ட பட்டியலைத் தயாரித்திருப்பதாகத் தெரிகிறது. அந்தப் பட்டியலில் இருப்பவர்கள் யார், யார்?
முகமது ஆரிஃப் கான்
குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான ரேஸில் அதிகம் அடிபடும் பெயர் இவருடையதுதான்! தற்போது கேரளாவின் ஆளுநராக இருந்துவருகிறார் முகமது ஆரிஃப் கான். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியிலிருந்த காலத்தில் எம்.எல்.ஏ, எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். வி.பி சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்.
சமீபத்தில் பா.ஜ.க நிர்வாகிகள், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்துகளை வெளிப்படுத்தியதால், இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இந்தியாமீது கடும் கோபத்திலிருக்கின்றன. இந்தக் கோபத்தை தணிக்க இஸ்லாமியரான முகமது ஆரிஃப் கானை குடியரசுத் தலைவராக்கும் திட்டத்தில் பா.ஜ.க தலைவர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
திரெளபதி முர்மு & ஜூவல் ஓரம்
ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவரான திரெளபதி முர்மு, கடந்த காலத்தில் மாநில அமைச்சராகவும் இருந்திருக்கிறார். 2015 முதல் 2021 வரை ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர் திரெளபதி. அந்த மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. போன முறையே குடியரசுத் தலைவர் வேட்பாளராக இவர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஒடிசாவைச் சேர்ந்த மற்றொரு பழங்குடியினத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜூவல் ஓரமின் (JUAL ORAM) பெயரும் பா.ஜ.க-வின் சாய்ஸில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கை சற்று ஓங்கியிருப்பதால், சில மாநிலக் கட்சிகளின் ஆதரவு பா.ஜ.க-வுக்கு தேவைப்படுகிறது. எதிர்க்கட்சிகளிடமிருந்து விலகி நிற்கும் ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சியைப் பெரிதும் நம்பியிருக்கிறது பா.ஜ.க. எனவே, அவர்களது ஆதரவைப் பெற ஒடிசாவிலிருந்து ஒரு வேட்பாளரை முன்னிறுத்த பா.ஜ.க திட்டமிட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.
அனுசுயா யுகே
தற்போதைய சத்தீஸ்கர் மாநில ஆளுநர்தான் அனுசுயா. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியிலிருந்தபோது எம்.எல்.ஏ-வாக பணியாற்றியிருக்கிறார். பின்னர் பா.ஜ.க-வுக்குத் தாவிய இவர், ராஜ்ய சபா எம்.பி-யாகவும் இருந்திருக்கிறார். திரெளபதி முர்முவைப் போலவே இவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பதால், பா.ஜ.க-வின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம்பிடித்திருப்பதாகத் தெரிகிறது.
தவார் சந்த் கெலாட்
பா.ஜ.க-வின் பட்டியலின முகங்களுள் ஒருவராக இருப்பவர் தவார் சந்த் கெலாட். தற்போது கர்நாடக ஆளுநராக இருக்கும் இவர், மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பட்டியலின மக்களின் வாக்குகளைக் குறிவைப்பதற்காக பா.ஜ.க., தவார் சந்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இது தவிர மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் பெயரையும் பா.ஜ.க பரிசீலித்துவருவதாகச் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டிலிருந்து..?
தெலங்கானாவின் ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜனின் பெயரும் இந்த வேட்பாளர் ரேஸில் அடிபடுகிறது. தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்க பல்வேறு முயற்சிகளை பா.ஜ.க எடுத்துவருகிறது. அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரைக் குடியரசுத் தலைவராக்கலாம் என்ற எண்ணமும் பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களிடம் இருக்கலாம்.
சில தினங்களுக்கு முன்னர், `தமிழ்நாட்டிலிருந்து, இளையராஜாவைக் குடியரசுத் தலைவராக்க பா.ஜ.க முயல்கிறது’ என்று தகவல்கள் பரவிவந்தன. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!