தொழிலில் நஷ்டம்; சனி விலக மாந்திரீகம் செய்து 3 வயது குழந்தையை பலி கொடுத்த தந்தை!

தொழில் ஓஹோவென்று சிறக்க வேண்டும் என்பதற்காக மாந்திரிகம் செய்து, தன்னுடைய 3 வயதுக் குழந்தையைக் கொன்ற தந்தையை, ஆந்திர போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர், வேணுகோபால். இவர், செங்கல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது தொழிலில் தொடர்ந்து நஷ்டங்களைச் சந்தித்தவர். நஷ்டம் உண்டாக தீய சக்திகளே காரணம் என்று நம்பிய அவர், அவற்றை விரட்டியடிக்க, உடனடியாக மாந்திரீகச் சடங்கு (Black Magic Ritual) செய்ய முடிவு செய்துள்ளார்.

கொலை

அதன்படி, பேரரெட்டிப்பள்ளியில் உள்ள தனது சொந்த வீட்டில், சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். சடங்கின் ஒரு பகுதியாக, தனது 3 வயது குழந்தைக்கு மஞ்சள் நீர் ஊற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குழந்தையின் வாயில் குங்குமம் உள்ளிட்டவற்றை வைத்து, மூச்சுத்திணறும்படி செய்ததாக கூறப்படுகிறது.

அத்துடன், வேணுகோபால் தன்னுடைய கைகளாலேயே குழந்தையின் கழுத்தை நெறித்துள்ளார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த இவரின் மூத்த மகள், அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்து அழுதுள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனே அங்கு விரைந்து குழந்தையை மீட்டதாக, காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, ஆபத்தான நிலையில் குழந்தையை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குழந்தையின் உடல்நிலை, மிக மோசமான நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக, குழந்தையை அனுப்பிய நிலையில், ஜூன் 16 ஆம் தேதி குழந்தை இறந்துள்ளது. இச்சம்பவத்தில் எந்தவொரு பூசாரியும் ஈடுபடுத்தப்படவில்லை. வேணுகோபால் அடிக்கடி தன் குடும்பத்தினரிடம் சனி தசை சரியில்லை என கூறி வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்றும், சனி தோஷம் விலக பூஜை செய்யப்போவதாகக் கூறியதாக, ஆத்மகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவசங்கர் தெரிவித்தார்.

உயிரிழப்பு – சித்திரிப்பு படம்

குழந்தை இறந்ததைத் தொடர்ந்து, இந்திய தண்டனை சட்டம் 302, கொலை குற்றத்தின்கீழ், வேணுகோபாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலுக்காக பெற்ற குழந்தையை பலி கொடுத்த இச்சம்பவம், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.