நாட்டில் பல பகுதிகளில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு?! – மறுக்கும் மத்திய அரசு… நடப்பது என்ன?!

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்தியாக வெளியாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது செயற்கை தட்டுப்பாடா? எனவும் கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாகத் தனியார் விற்பனை நிலையங்களை விட, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் (பங்க்) விற்பனை அதிகரித்து வருவதாக அந்தந்த நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. இதனால் அந்தந்த மாநிலங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் – டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து டாலர் மதிப்பில் ஏற்றம் இறக்கம், உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி காரணமாக எண்ணெய் நிறுவனங்களிலிருந்து விநியோகிஸ்தர்களுக்கு எரிபொருள் கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வாகன ஓட்டிகள் பெட்ரோல் டீசலுக்காக நீண்ட வரிசையில் காத்துள்ளனர்.

பெட்ரோல்

நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்த நிலையில் கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடுகட்ட வேண்டும் என கோரின. இந்த பிரச்னைக்கு மத்தியில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் சப்ளையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 4,500 பெட்ரோல் பங்குகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் லாரி உரிமையாளர்களுக்கு டீசல் குறிப்பிட்ட அளவே வழங்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என லாரி உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் இத்தகைய கூடுதல் தேவையையும் சமாளிக்கும் வகையில் நாடு முழுவதும் போதுமான அளவுக்கு பெட்ரோல்-டீசல் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் சில பகுதிகளில் பொதுத்துறை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் (பங்க்) கடந்த சில நாள்களாக விற்பனை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் பெட்ரோல்-டீசலுக்கு 50 சதவீதம் அளவுக்குக் கூடுதல் தேவை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் விற்பனை நிலையங்களில் தாமதம், வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரம் அதிகரிப்பு போன்றவை நடந்து வருகின்றன. இது, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் விநியோக தடைகள் பற்றிய யூகங்களுக்கு வழிவகுத்து உள்ளது. விவசாய தேவை, மொத்தமாக வாங்குபவர்கள் தங்கள் கொள்முதலை பெட்ரோல் பங்க்-களுக்கு மாற்றியது மற்றும் தனியார் விற்பனை நிறுவனங்களில் வாங்குவோர் பொதுத்துறை நிறுவனங்களுக்குக் கொள்முதலை மாற்றியது போன்றவை காரணமாக இந்த தேவை அதிகரிப்பு நிகழ்ந்து உள்ளது.

பெட்ரோல்

எனினும் நாட்டின் பெட்ரோல்-டீசல் உற்பத்தியானது தேவையை விட அதிக அளவுக்கு உள்ளது. இதன் மூலம் எத்தகைய திடீர் தேவை அதிகரிப்பையும் சமாளிக்க முடியும். அதேநேரம் தற்போதைய திடீர் தேவை அதிகரிப்பு காரணமாக சில தற்காலிக தொழில்நுட்ப பிரச்னைகளை உள்ளூர் மட்டத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே எண்ணெய் நிறுவனங்கள், டிப்போக்கள் மற்றும் விநியோக மையங்களில் இருப்புகளை அதிகரித்தல், சில்லறை விற்பனை நிலைய சேவைக்காக டேங்கர் லாரிகளின் கூடுதல் இயக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்சினை சரி செய்யப்படும். டிப்போக்கள் மற்றும் விநியோக மையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு மற்றும் தேவைப்படும் மாநிலங்களில் சப்ளை செய்வதற்குக் கூடுதல் எரிபொருட்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு குறித்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் தகவல் வெளியிட்டு உள்ளன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் கட்டணங்கள் அதிகரிக்காததால், அரசுப் போக்குவரத்துக்கழகம் போன்ற மொத்தமாக வாங்குபவர்கள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்குவதை விட பெட்ரோல் பங்குகளிலேயே நிரப்புவதே இத்தகைய தேவை அதிகரிப்புக்குக் காரணம் என அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. எனினும் சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்குவதற்கான பெட்ரோல்-டீசல் போதுமான அளவுக்குக் கையிருப்பு இருப்பதாகவும் அவை கூறியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.