எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மக்கள் வங்கியில் கடன் கடிதம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக 42.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான கடன் கடிதம் மக்கள் வங்கியில் திறக்கப்பட்டுள்ளது.
300,000 பீப்பாய்கள் 92 ஒக்டேன் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி பற்றாக்குறை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாளாந்தம் தேவையான எரிபொருளை நாட்டிற்கு விநியோகிக்க முடியாத நிலைக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தள்ளப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக நாட்டிற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.
இந்தியா வழங்கிய 500 மில்லியன் கடன் வசதி மூலம் இலங்கைக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், குறித்த கடன் வசதியின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட இறுதி எரிபொருள் கப்பல் நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில், மீளவும் இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பிலான எந்த அறிவிப்பையும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிடவில்லை.
நாள் கணக்கில் காத்திருக்கும் பொது மக்கள்
இதனிடையே, நாட்டில் எரிபொருள் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், எரிபொருளை பெற்றுக்கொள்ள நாள் கணக்கில் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்துள்ளனர்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்க ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை இணைய வழியில் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கதகது.