புதுடெல்லி: புதிய சமையல் காஸ் இணைப்புக்கான டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.1,450-ல் இருந்து ரூ.2,200 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் 30.39 கோடி சமையல் காஸ் இணைப்புகள் உள்ளன. இதில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மட்டும் 9 கோடி இணைப்புகள் உள்ளன. புதிய சமையல் காஸ் இணைப்பு பெற ஒரு சிலிண்டருக்கு ரூ.1,450 டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்களின் நிதிச் சூழலை கருத்தில் கொண்டு புதிய இணைப்புக்கான டெபாசிட் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதன்படி 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.2,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 சிலிண்டர்களுக்கு ரூ.4,400 செலுத்த வேண்டும்.
அதேபோல், 5 கிலோ சிலிண்டருக்கு முன்பு ரூ.800 டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டது. தற்போது இது ரூ.1,150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.150-க்கு வழங்கப்பட்ட ரெகுலேட்டர் ரூ.250 ஆகவும், இணைப்பு குழாய் விலை ரூ.150 ஆகவும், பதிவு அட்டை விலை ரூ.25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.