இந்திய இலங்கை இராஜதந்திர உறவின் 75 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு, 2022 ஜூன் 14 ஆம் திகதி புனித பொசன் போயா தினத்தில் அனுராதபுரம் ருவான்வெலி மஹா சேயா வளாகத்தில் ஜாதக கதைகள் ஒலிப் புத்தகம் சிங்கள மொழியில் வெளியிட ப்பட்டது.
செவிப்புலன் பாதிப்புடையவர்கள் பயன்பெறுவதனை இலக்காகக்கொண்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள இந்த தொகுப்பானது 50 ஜாதகக் கதைகளைக் கொண்டுள்ளதுடன் ஜாதகட்டாகதைகள் என்ற தொகுப்பிலிருந்து நல்வழி என்ற தொனிப்பொருளின் கீழ் தெரிவுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பிரிவின் கவுன்சிலரும் உயர் ஸ்தானிகராலய தலைமை அதிகாரியுமான டாக்டர் சுஷில் குமார் அவர்கள் இந்த ஒலி வடிவத்திலான நூலின் முதல் தொகுப்பினை சங்கைக்குரிய மஹாசங்கத்தினரிடம் கையளித்தார்.
2. சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் மற்றும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் சமகால இந்திய கற்கைகளுக்கான நிலையம் ஆகியவற்றின் ஒன்றிணைவில் இந்த ஒலிப்புத்தகம் வடிவமைக்கப்பட்டதுடன் அதிவணக்கத்துக்குரிய ரம்புக்கணை சித்தார்த்த தேரர் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் ரேவந்த் விக்ரம் சிங், கொழும்பு பல்கலைக் கழகத்தின் சமகால இந்திய கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் உபுல் ரஞ்சித் ஹேவாவிதானகமகே, டாக்டர் டபிள்யூ.ஏ.அபேசிங்ஹ உள்ளிட்ட பலரின் மேற்பார்வையுடனும் பிரபலமான தொலைக்காட்சி மற்றும் வானொலி தொகுப்பாளர் வத்சலா சமரக்கோன் அவர்களின் பங்களிப்புடனும் இந்த ஒலிப்புத்தகம் தொகுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3. இந்நிகழ்வில் காணொளி மூலமாக சிங்கள மொழியில் உரையாற்றியிருந்த உயர் ஸ்தானிகர் கௌரவ கொபால் பாக்லே அவர்கள், அறநெறிப் பிரசங்கமாகவே இந்த ஜாதக கதைகளின் ஒலிப்புத்தகமானது இந்திய மக்களால் இலங்கை மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஜாதகக் கதைகள் உட்பட்ட பௌத்த மரபானது இந்தியாவிற்கும் பல நாடுகளுக்கும் இடையில் ஒரு முக்கியமான நாகரீக பிணைப்பை உருவாக்கியது என்று இங்கு சுட்டிக்காட்டியிருந்த அவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிடமிருந்து பௌத்தத்தை பரிசாகப் பெற்ற முதல் நாடுகளில் இலங்கைக்கு மிகவும் சிறப்பான இடம் உண்டு என்றும் குறிப்பிட்டார். மேலும், இதேபோன்ற முன்னெடுப்புகள் இரு அயல் நாடுகளுக்கும் இடையே பொதுவான கலாசார, பாரம்பரிய மற்றும் மக்களிடையேயான பிணைப்புகளை வலுப்படுத்த உதவும்.
4. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவுகளை வலுவாக்க இந்திய அரசாங்கம் அண்மைக்காலத்தில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில்கொள்ளப்படவேண்டியதாகும். பௌத்த உறவை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சிறப்பு நன்கொடை, 2021 அக்டோபரில் புனித ‘வப் பொயா’ நாளில் இலங்கையிலிருந்து புனித நகரமான குஷிநகருக்கு சர்வதேச விமான சேவையின் அங்குரார்ப்பணம்; 2021 அக்டோபரில், வஸ்கடுவா ராஜகுரு ஸ்ரீ சுபூதி மஹா விஹாரையில் உள்ள புனித கபிலவஸ்து புத்த சின்னங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தமை உட்பட பல்வேறு திட்டங்கள் இவற்றில் உள்ளடங்குகின்றன.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
17 ஜூன் 2022