பூரிப்பான பேச்சும்.. விதவிதமான உணவுகளுடன் விருந்தும்.. களைகட்டிய விக்ரம் சக்சஸ் ப்ரஸ் மீட்

கடந்த பத்து வருடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியான என் படம் விக்ரம் தான்!” – கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்துல கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இந்தப் படம் வசூலில் பெரிய சாதனைகள் படைத்தததைக் கொண்டாடும் விதமாக படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், படத்தை வெளியிட்ட உதயநிதி, செண்பக மூர்த்தி, கோபுரம் சினிமாஸ் அன்புசெழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனிருத் பேசும் போது, “விக்ரம் தொடங்கியதில் இருந்தே ஒரு நேர்மறையான உணர்வு இருக்கிறது. அதுதான் இவ்வளவு வெற்றியை கொடுத்திருக்கிறது. கேரளாவில் ஒருவர் கமல் உங்களுக்கு என்ன கிஃப்ரனட் கொடுத்தார் எனக் கேட்டார், விக்ரம் கொடுத்ததே கிஃப்ட் தான். படத்தின் பின்னணி இசையை வெளியிட சொல்லி கேட்கிறார்கள். அது தயாராகிவிட்டது விரைவில் வெளியிடுவோம்.” எனக் கூறினார்.

image

கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் “கமல் சார் பணத்திற்கு ஆசைப்பட்டதில்லை. ஆனால் இந்தப் படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என விரும்பினார். மற்ற மொழிப் படங்கள் பெரிய வசூல் செய்யும் போது அதை ஒரு தமிழ்ப்படம் செய்யவில்லை என்ற ஏக்கத்தை தீர்த்திருக்கிறது விக்ரம்” எனக் கூறினார்.

உதயநிதி பேசும்போது, “டான் படத்தின் வெற்றிவிழா போலவே இங்கும் சில உண்மைகளை சொல்கிறேன். இந்தப் படத்தை கமல் சார் முதலில் எங்களுக்குப் போட்டுக்காட்டினார். பார்த்து மிரண்டுவிட்டோம். இந்தப் படத்தைப் பற்றி முதல் ட்வீட் போட்டது நான்தான் என்பது பெருமையாக இருக்கிறது. படத்தின் எம்ஜி வாங்காமல் விட்டுவிட்டோம் என செண்பக மூர்த்தி கவலைப்பட்டார். அனிருத் கூட அடுத்த படத்தில் இருந்து படத்தின் ஏரியா உரிமையை வாங்கிக் கொள்வோமா என்று கேட்டார். இந்தப் படத்தை இதுவரை 7 முறை பார்த்துவிட்டேன். அந்த அளவு தாக்கம் கொடுத்துள்ளது. இந்தப் படம் ஒரு ட்ரெய்ன் என்றால் கடைசி பயணி நான் என்று சொன்னேன். மன்னிக்கவும் இது ட்ரெய்ன் இல்லை ராக்கெட். தமிழ்நாடு விநியோகஸ்தராக கூறுகிறேன் இதுவரை ஷேர் மட்டும் 75 கோடி கிடைத்துள்ளது. இதுவரை எந்தப் படமும் இந்த சாதனையை செய்ததில்லை” என்றார்.

image

லோகேஷ் பேசுகையில், “இந்தப் படத்துக்காக எல்லா சலுகையையும் கொடுத்த கமல் சாருக்கு நன்றி. படத்தின் கடைசி கட்ட வேலைகளில் நாங்கள் தூங்காமல் வேலை பார்த்தது போல, கமல் சார் ப்ரமோஷனுக்காக அலைந்து கொண்டிருந்தார். வெளிநாடுகளுக்கு படம் சரியான நேரத்தில் சென்று சேர்ந்ததற்கு காரணம் அனிருத் தான். தூங்காமல் படத்தின் வேலைகளை முடித்துக் கொடுத்தார். படம் வெற்றியடைந்ததும் கமல் சார் கூறியது ஒன்றுதான். அடுத்த வேலையை உடனே ஆரம்பி கேப் எடுக்காதே என்று சொன்னார்.” எனக் கூறினார்.

கமல்ஹாசன் பேசும்போது, “ஒரு படத்தின் வெற்றிக்கு ஒரு ஆள்தான் காரணம் எனக் கூறமுடியாது. நடிப்புக்கு என்னை அழைத்து வந்த பாலச்சந்தர் அவர்களுக்கு நன்றி. இந்த பத்து வருஷத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியான என் படம் இதுதான். அதற்கு பலரும் துணை நின்றார்கள். தொலைக்காட்சிக்கு சென்ற போது பலரும் சொன்னார்கள். ஆனால், நான் சுதாரித்துக் கொண்டு அங்கு சென்றதன் விளைவு எல்லோர் வீட்டிலும் சென்று சேர்ந்தேன். அப்படி பார்த்தால் நான் ப்ரமோஷனை எப்போதோ ஆரம்பித்துவிட்டேன். அது விக்ரம் படத்துக்காக என்பது பிறகு முடிவானது. ஃபெஸ்டிவல் தினத்தில் படத்தை வெளியிடுங்கள், இல்லை ரிலீஸை ஃபெல்டிவல் ஆக்குங்கள் என்றார் அன்புச் செழியன். படத்தை ஃபெஸ்டிவல் போல கொண்டாடியிருக்கிறார்கள் மக்கள்.

image

நல்ல படத்தை ரசிகர்கள் விட்டுவிட மாட்டார்கள். அந்த நல்ல படம் என்ன என்பதை கற்றுக் கொண்டு வந்திருக்கிறார் லோகேஷ். கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் ஆசிரியராக மாற வேண்டும். இதை நிறைய பேருக்கு கற்றுக் கொடுங்கள். அனிருத் பற்றி என்ன சொல்வது, தனியாக பார்த்தால் கலேஜூக்கு போகலையா என்று கேட்பார்கள். ஆனால் இசையால் மிரட்டுகிறார். இப்படிப் பலர் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். உதயநிதியை தனியாக பாரட்ட வேண்டும் என்றில்லை, அவரிடம் இல்லை நேராக அவரின் அப்பாவிடமே கூறினேன். 75 கோடி ஷேர் வரும் என்று உண்மையை யாரும் மைக்கில் கூற மாட்டார்கள். அந்த நேர்மை படத்தை வெற்றியாக்கியிருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவீஸ்க்கு ஒரு வேண்டுகோள் என்ன என்றால், இதை தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்.

விமர்சகர்கள் எல்லோருக்கும் நன்றி, எங்களை செதுக்கும் விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறோம். கிண்டலுக்காக விமர்சனம் செய்பவர்களை பதிலுக்கு கிண்டல் செய்வது கூட நேர விரயம் என கருதுகிறேன்.” எனக் கூறினார்.

image

இந்த சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் 40 வகையான விதவிதமான உணவுகளுடன் விருந்து அளிக்கப்பட்டது. விருந்தின் மெனுவில்  நாட்டுக்கோழி சூப், முருங்கை கீரை சூப், மாம்பழ ரோல், லிச்சி பழ சந்தேஷ், மட்டன் கீமா உருண்டை, சிக்கன் பிச்சுப்போட்ட வறுவல், வஞ்சரம் மீன் வறுவல், இறால் தொக்கு, மட்டன் சுக்கா, சோள சீஸ் உருண்டை, பன்னீர் டிக்கா, மெக்சிகன் டாகோஸ், ஜலபேனோ சீஸ் சமோசா, கொங்கு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி, கொங்கு ஸ்பெஷல் சைவ பிரியாணி, தால்சா, ரைதா, விருதுநகர் பன் பரோட்டா, சிக்கன் பள்ளிபாளையம் கிரேவி, சைவ பள்ளிபாளையம் கிரேவி, இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா, சைவ குருமா, மதுரை மட்டன் கறி தோசை, முட்டை தோசை, மைசூர் மசால் தோசை, பொடி தோசை, வெங்காய தோசை, கொய்யாக்காய் சட்னி, கோவைக்காய் சட்னி, நிலக்கடலை சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார், சாமை அரிசி தயிர் சாதம், மோர் மிளகாய், மாங்காய் ஊறுகாய், சுக்கு பால், ஐஸ்கிரீம், நறுக்கிய பழங்கள், பீடா என 40 வகையான உணவு பதார்த்தங்கள் இடம்பெற்றன. இந்த விருந்தில் லோகஷ் கனகராஜ் உடன் கமல்ஹாசன் அமர்ந்து சாப்பிட்டார். 

– ஜான்சன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.