திருவெறும்பூர் பெல் தொழிற்சாலையைச் சார்ந்த தொழிற்சங்க அங்கிகார தேர்தல் வரும் 23-ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிடும் பெல் அண்ணா தொழிற்சங்கத்திற்கான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய அவர்,
எப்போதுமே தொழிலாளர்களது நலனிற்காக போராடும் அண்ணா தொழிற்சங்கம் தற்போது 3 வது இடத்தில் உள்ளது. பெல் தொழிற்சாலையின் பங்குபெறும் முதன்மை சங்கமாக முதலிடத்தைப் பிடிக்கும் வகையில் நமது தொழிற்சங்கத்தினர் பணியாற்றிட வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கைகளை மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் பாராளுமன்றத்தில் பேசி நிறைவேற்ற குரல் எழுப்புவார்.
கடந்த காலத்தில் 5 ஊழியர்களை வெளிமாநிலங்களுக்குப் பணியிட மாற்றம் செய்ததை பெல் கார்பரேட் நிறுவனத்திடம் பேசி அவர்களுக்கு மீண்டும் இதே இடத்திலேயே பணியாற்ற வைத்ததும் அதிமுக தான். திருவெறும்பூர் ஐடிஐ., யிலிருந்து பெல் ட்ரைனிங் சென்டர் வரை மேம்பாலம் கொண்டு வருவதற்கும் அதிமுகவும், அதன் அண்ணா தொழிற்சங்கமும்தான் காரணம்.
மக்கள் மீதான அக்கறையில்லாத மக்கள் விரோத திமுக ஆட்சி தற்போது நடக்கிறது. திருச்சி பால்பண்ணை – துவாக்குடி வரை சர்வீஸ் சாலை நிறைவேற்றுவதாக கூறி ஆட்சிக்கு வந்து இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. பெல் ஆர்டர் தகுதியில்லாத பிஜிஆர் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநிலங்களவை எம்பி., யும், அதிமுக வழிகாட்டுதல்குழு உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி. வி சண்முகம் பேசுகையில்.
தற்போது 3 வது சங்கமாக உள்ள அண்ணா தொழிற்சங்கம் வரும் தேர்தலில் முதன்மை சங்கமாக வெற்றி பெற வேண்டும். அதற்காக நாம் முன்பு தொழிலாளர்களுக்காக சேவையாற்றியதை எடுத்துக்கூறி செயல்பட வேண்டும். வரும் காலத்தில் அதிமுக ஆட்சியும் அமைவதற்கு கட்டியம் கூறும் விதமாக பெல் தொழிற்சங்க அங்கிகார தேர்தலில் முதலிடத்தைப் பெற வேண்டும்.
ஏழை எளிய பாட்டாளி மக்களுக்கான இயக்கம் அதிமுக மட்டுமே. தொழிலாளர்களுக்காகவும், அரசு ஊழியர்களுக்காகவும் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதிமுகவின் தோல்விக்கும், திமுகவின் வெற்றிக்கும் 3 சதவிகிதம் வித்யாசம். அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தும் திமுக நிதி அமைச்சர் குறித்தெல்லாம் பெல் ஊழியர்களிடையே விளக்கிக் கூற வேண்டும்.
நெய்வேலியைத் தனியாருக்குச் செல்லவிடாமல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு காப்பாற்றியது வரலாறு. இதுபோன்று திமுகவிடம் காண முடியாது. என்று கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் எம்பி ரத்தினவேல், முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, வளர்மதி, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்எல்ஏ, சிதம்பரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.கே பாண்டியன் எம்ஏல்ஏ ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
க.சண்முகவடிவேல்