சென்னை: பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா இலச்சினையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியீட்டார்.
தமிழகத்தில் பொதுசுகாதாரத்துறை 1922ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கர்னல் எஸ்.டி.ரஸ்ஸல் என்பவரை இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு வரை நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக வரும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச பொது சுகாதாரத்துறை மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
சென்னையில் நடைபெற உள்ள இந்த பன்னாட்டு பொது சுகாதார மாநாடு வரும் டிசம்பர் மாதத்தில் 3 நாட்கள் நடைபெறும். உலகளாவிய பொதுசுகாதார வல்லுநர்கள், முன்னோடிகள், ஆய்வு அறிஞர்கள் தமிழகத்திற்கு வரவழைத்து அவர்தம் திறன் நுட்பங்களை அனுபவங்களை பல்வேறு தலைப்புகளின்கீழ் நம்மோடு பகிர்ந்துகொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.
தமிழக பொதுசுகாதாரத் துறை கடந்து வந்த பாதை, சாதனைகளை கண்காட்சியாக இந்த பன்னாட்டு சுகாதார மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இந்த மாநாட்டின் முன்னோட்டமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநாட்டு இணையதளத்தை தொடங்கி வைத்து, நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டார்.