மதுரா,
நாடு முழுவதும் ‘அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டத்திற்கு’ எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி, அரியானா, ராஜஸ்தான், பீகார், வங்காளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
ரெயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வரும்போது, அவர்களுக்கு அருகே பணியில் இருந்த போலீசை நோக்கி போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால், குழந்தையை அவர்களிடம் இருந்து காப்பாற்றும் நோக்கில் அந்த நபர் தோளில் குழந்தையை சுமந்தபடி தனது குடும்பத்துடன் ஓடி வரும் காட்சிகள் வெளிவந்துள்ளன. கூட்டத்தினரை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியபோதும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசு பேருந்துகள் மற்றும் கார்களின் ஜன்னல் கண்ணாடிகளை கற்களை வீசி தாக்கி உடைத்தனர்.
இந்த காட்சிகள் வைரலாகி உள்ளன. சம்பவ பகுதிக்கு மூத்த அதிகாரிகள் சென்றுள்ளனர் என மதுரா நகர போலீசார் தெரிவித்து உள்ளனர். போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.