அவுரங்காபாத்: விவசாயம் கைகொடுக்கவில்லை என சுட்டிக்காட்டி ஹெலிகாப்டர் வாங்க வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர்.
மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தை சேர்ந்தவர் கைலாஷ் படாங்கே. 22 வயதான அவர் தனக்கு சொந்தமாக உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த வியாழன் அன்று தங்கள் பகுதியில் உள்ள வங்கி கிளை ஒன்றில் கடன் கேட்டு அணுகியுள்ளார். வழக்கமாக விவசாயிகள் விவசாயம் சார்ந்த பணிகளுக்காக தான் கடன் கேட்டு வங்கிகளை அணுகுவார்கள். ஆனால் இவரோ ஹெலிகாப்டர் வாங்க கடன் வேண்டுமென கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதற்கான காரணத்தை அவரே விளக்குகிறார்.
“கடந்த இரண்டு வருடங்களாக எனது நிலத்தில் நான் சோயாபீன்ஸ் பயிரிட்டு வருகிறேன். ஆனாலும் மழை பொய்த்து போன காரணத்தால் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் ஏதும் கிடைக்கவில்லை. பயிர் காப்பீடு மூலம் கிடைக்கும் தொகையும் போதவில்லை. அதனால் ஹெலிகாப்டரை வாங்கி, வாடகைக்கு விட்டு, வருமானம் பார்க்கலாம் என முடிவு செய்துள்ளேன். அந்த காரணத்தால் தான் வங்கியில் 6.65 கோடி ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளேன். மற்ற தொழில்களில் போட்டி அதிகம் உள்ளது. அதனால் ஹெலிகாப்டர் வாடகை விடும் தொழிலை செய்யலாம் என முடிவு செய்துள்ளேன்.
பணம் படைத்த பெரிய மனிதர்கள் மட்டும் தான் பெரிய கனவுகள் காண வேண்டும் என யார் சொன்னது? விவசாயிகளும் பெரிய கனவுகளை காணலாம்” என தெரிவித்துள்ளார் கைலாஷ்.