இந்தியாவில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்திற்காக பாரத் கவுரவ் ரயில்கள் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்று இடங்களை காட்சிப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 190 ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த 190 ரயில்களில் ஐஆர்சிடிசி-யின் கீழ் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களின் கீழும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தனியார் நிறுவனங்கள் ரயில்களை குத்தகைக்கு எடுத்து பயணிகளுக்கு ரயில் சேவைகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழத்தில் இருந்து முதல் தனியார் ரயிலாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் இருந்து ஷீரடிக்கு தனியார் ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயிலில் 70 சதவீதம் பயணிகள் பயணித்துள்ளதாக ரயில்வே தரப்பில் இருந்து கூறப்படும் நிலையில், இந்த தனியார் ரயிலுக்கு வரவேற்பு இருக்கும் அதே அளவுக்கு எதிர்ப்புகளும் இருந்தது. ஆனாலும் ரயில்வே துறை தனியார் வசம் சென்றுகொண்டிருக்கும் நிலையில், 2-வதாக தமிழகத்தின் மதுரையில் இருந்து உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்யாராஜ் நகருக்கு தனியார் ரயில் ஒன்று இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும், இந்தியாவின் பாரம்பரிய சுற்றுலா இடங்களை பயணிகள் கண்டுகளிக்கவும் இந்த ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்து. மேலும் பாரத் கவுரவ் ரயில்கள் திட்டத்தின் மூலம் இயக்கப்படும் ரயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகததின் மதுரையில் இருந்து உத்திரபிரதேசத்தின் பிரக்யாராஜ் நகருக்கு இயக்கப்படும் தனியார் ரயில் வரும் ஜூன் 23-ந் தேதி முதல் தொடங்கும் என்றும், இந்த ரயில் மதுரையில் இருந்து சென்னை வழியாக விஜயவாடா, வாரணாசி, கொல்கத்தா, பூரி ஆகிய நகரங்களை கடந்து 12 நாட்கள் பயணம் செய்து உத்திரபிரதேசத்தின் பிரக்யாராஜ் நகரை சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 6 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளும், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் இருக்கும் என்று ரயில்வே துறை கூறியுள்ளது.
மேலும் மதுரையில் இருந்து பிரக்யாராஜ் நகருக்கு செல்லும் சிறப்பு தனியார் ரயில் கட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும், 12 நாட்கள் பயணம் மேற்கொண்டு பிரக்யாராஜ் செல்லும் ரயில் மறுநாள் அங்கிருந்து மதுரை நோக்கி புறப்படும் என்றும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil