சென்னையில் ஒன்லைன் ரம்மி விளையாடி 20 லட்சத்தை இழந்த நபர் தற்கொலை செய்துகொண்டார்.
ஒன்லைன் ரம்மி எனும் சூதாட்டத்தில் ஆண், பெண் என பல தரப்பினரும் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர்.
சென்னை மணலியைச் சேர்ந்தவர் நாகராஜ்(42). பெயிண்டிங் காண்டிராக்டராக வேலை பார்த்து வந்த இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
ஒன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான நாகராஜ், அடிக்கடி தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சூதாட்ட விளையாட்டை கைவிட வேண்டும் என நாகராஜின் மனைவி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவரும் வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து ஒன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
நாகராஜ் கடந்த ஆறு ஆண்டுகளாக மனைவியின் நகைகளை அடமானம் வைத்து விளையாடியுள்ளார். இதில் அவர் சுமார் 20 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
இதனால் கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் நாகராஜ் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.
அதில் ‘ஒன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.20 லட்சம் இழந்து கடனாகி விட்டது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’
என எழுதப்பட்டிருந்தது. ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.