தமிழ்நாட்டின் நேர்மையான அதிகாரிகளில் ஒருவர் என்று பொதுமக்களிடம் நற்பெயர் எடுத்துள்ள புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு முதல்வருக்கு விடுத்துள்ளார், அந்த மாவட்ட பாஜக தலைவர்.
ஆட்சியர் செய்த குற்றம் என்ன? – இரு பாகங்கள் கொண்டதும், நிவேதிதா லூயிஸ் எழுதியதுமான ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூலைத் தமிழக முதல்வருக்கு அவர் பரிசாக அளித்ததுடன் அதற்கான காரணத்தை ஆட்சியரின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் என்பதுதான்!
“சாதி, மத வேறுபாடுகள் இல்லாமல், அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் பொறுப்பில் உள்ள மாவட்ட கலெக்டர், ஒரு மதத்தைத் தூக்கிப்பிடிக்கும் வகையில் செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. அவரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்” என்று அத்தலைவர் தன் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளதாகவும், இதனால் ஒரு பெரும் ‘சர்ச்சை’ வெடித்துள்ளதாகவும், ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீதான பாஜக தலைவரின் குற்றச்சாட்டு, அந்த நூல் மீதும் அதை எழுதியவர் மீதுமான குற்றச்சாட்டுமாகும்.
‘அறியப்படாத கிறிஸ்தவம்’ நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் “நேருவின், காந்தியின், போஸின் இந்தியாவின் ஒரு துளி” என்று அவர் தன்னைஅடையாளப்படுத்திக் கொள்கிறார். மேலும், “என் பெயர் நான் விரும்பியோ, விரும்பாமலோ என் அடையாளமாகிவிட்டது. அதை நான் மாற்றுவதற்கில்லை. ஆனால், அது என் மதம், சாதி சார்ந்த அடையாளமல்ல” என்றும், தமிழகத்தைப் பொறுத்தவரை, “கிறிஸ்தவம் என்ற மதம் இம்மண்ணில் வெளியிலிருந்து வந்ததே என்பதை மறுப்பதற்கில்லை…
இதுதான் என் மண். இந்த நிலம் என் மூதாதையர்களின் ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த நிலம். தமிழ் எங்கள் அடையாளம், உயிர் மூச்சு. அந்த உணர்வே முதல். மற்றவை எல்லாம்… அது சாதியாகட்டும், மதமாகட்டும், பின்னர்தான்… தமிழக தேவாலயங்களுக்கான ‘கைடு புக்’ அல்ல இந்நூல்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூலுக்குத் தென்னிந்தியாவின் முக்கியமான மானுடவியலர்களில் ஒருவரான பக்தவத்சல பாரதி ஆழமான முன்னுரை எழுதியிருக்கிறார்; அவர் ஓர் இந்து. இன்னொருவர், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் மேனாள் துணைக் கண்காணிப்புத் தொல்லியலரும் ஆராய்ச்சி வல்லுநருமான முனைவர் மார்க்ஸிய காந்தி. இவரும் இந்துதான். எனவேதான், தமிழக முதல்வருக்குப் பரிசாக வழங்கப்படத் தகுதியுள்ள நூல்தான் இது என்று கவிதா ராமு தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அவரும் ஓர் இந்துதான்.
எல்லா நூல்களையும்போலவே, இந்த நூலும் விமர்சனத்துக்கும் உட்படுத்தப்படக்கூடியதுதான். ஆனால், அந்த விமர்சனம் அறிவையும் ஆராய்ச்சியால் கண்டறியப்பட்ட விவரங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, இது ஒரு மதப் பரப்புரை நூல், இதை முதல்வருக்குப் பரிசாகக் கொடுப்பது ஒரு குறிப்பிட்ட மதத்தைத் தூக்கிப்பிடிக்கிற செயல், அது அரசமைப்புக்கு விரோதமானது என்று பேசுவது அறியாமையாலோ, அரசியல் ஆதாயத்துக்காகவோ செய்யப்படுவது தவிர வேறல்ல.
> இது, மூத்த மார்க்ஸிய-பெரியாரியச் சிந்தனையாளர் எஸ்.வி.ராஜதுரை எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்