முதுமலை: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரு மணி நேரம் புல்தரையில் புரண்டு விளையாடிய புலியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக பெய்து மழையால், மாவட்டம் முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடர்ந்து பெய்த மழையால், புற்கள் முழுத்து பசுமை நிறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில், வாகன சவாரி மூலம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது கிராஸ்கட் வனப்பகுதி சாலை ஓரத்தில் உள்ள புல்வெளியில், 10 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று ஒய்யாரமாக சில மணி நேரம் ஓய்வு எடுத்தது. அதன்பின் புல்வெளியில் அங்கும் இங்கும் திரும்பியவாறு சுற்றுலா பயணிகளை பார்த்த அந்தப் புலி, சற்று நேரம் சுற்றுலா பயணிகளை கூர்ந்து நோக்கியது.
இருப்பினும் சுற்றுலா பயணிகளை பொருட்படுத்தாத அந்தப் புலி அப்பகுதியில் அமர்ந்தவாறு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்கும்போது போஸ் கொடுத்தது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து எழுந்து ஒய்யாரமாக வனப்பகுதிக்குள் நடந்து சென்றது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக புல்வெளியில் புரண்டு விளையாட்டிய புலியை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.