கர்நாடக அரசு, ராம்நகர் மாவட்டத்தில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டுள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கும்படி, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோல் அண்மையில், மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். கர்நாடக அரசு இதற்கான முழு திட்ட அறிக்கை தயாரித்து மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கர்நாடக அரசின் திட்டத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதனிடையே, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தலைவர் ஹல்தர் இன்று (ஜூன் 17) திருச்சி கல்லணையில் ஆய்வு செய்தார்.
கல்லணையில் ஆய்வு செய்த பின்னர், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர், “மேகதாது அணை குறித்து வரும் 23ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் நிச்சயம் விவாதிப்போம்; காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தலைவர் ஹல்தர் கூறியதாவது: “மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது; மேகதாது அணை குறித்து வரும் 23ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் நிச்சயம் விவாதிப்போம்; காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு; நாங்கள் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக இல்லை; யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“