தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக ஒருதலைபட்சமாக செயல்படும் ஆணையத்தை கண்டித்து கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், ஆணையத்தின் உறுப்பினர் நவீன்குமார் ஆகியோர் தமிழகத்தில் காவிரி ஆற்றுப் பகுதியில் இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். நேற்று காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வந்த ஆணையத்தின் குழுவினர் அங்கு ஆய்வு செய்தனர். பின்னர் இன்று காலை மேட்டூர் அணையை ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று மாலை தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தனர். முதலில் கல்லணைக் கால்வாய் ஆற்றின் தலைப்பு பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து கல்லணையில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வந்து, அங்கிருந்த தமிழக நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகளிடம், காவிரி ஆற்றில் எவ்வளவு தண்ணீர் உள்ளது, இங்கிருந்து எந்தந்த ஆறுகள் பிரிந்து செல்கிறது என கேட்டறிந்தனர்.
மேகேதாட்டு குறித்து விவாதிக்கப்படும்: பின்னர் செய்தியாளர்ளிடம் எஸ்.கே.ஹல்தர் கூறுகையில், “காவிரி ஆறு பகுதியில் உள்ள அணைகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு வருகிறோம். வரும் 23-ம் தேதி ஆணையத்தின் கூட்டம் நடைபெறும் போது, மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதிக்கப்படும். இந்த அணையை கட்டக் கூடாது என விவசாயிகள் கல்லணையில் நடத்திய போராட்டம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.
தமிழக அரசு மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்க கூடாது என்பது குறித்து, தமிழக அரசிடம் தான் கேட்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பாகும். இதன்பணி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின் படி, நீர் பங்கீடை செயல்படுத்துவதுதான்” என்றார்.
தொடர்ந்து, விவசாயிகள் வெ.ஜீவக்குமார், பூ. விசுவநாதன் ஆகியோர் எஸ்.கே.ஹல்தரை சந்தித்து மனுவை வழங்கினர். அப்போது அவர்கள், தமிழகத்தில் காவிரியை நம்பி 20 லட்சம் ஏக்கரில் பாசனம் செய்தோம். போதிய நீர் இல்லாத காரணத்தால் தற்போது அவை 12 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. கர்நாடக அரசு மேகேதாட்டில் அணை கட்டினால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது.
மேலும், குடிநீர் பற்றாக்குறையும், பாசனமும் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக விவசாயம் தமிழகத்தில் கேள்விக்குறியாகும். எனவே மேகேதாட்டில் அணை கூட்டக் கூடாது. ஆணையம் கூட்டும் கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள கூடாது. அதே போல் உச்சநீதிமன்றம் கூறியுள்ளபடி ஆணையம் தமிழகத்துக்கு உரிய மாதந்திர நீர் பங்கீடை பெற்றுத் தர வேண்டும் என்றனர்.
ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: முன்னதாக, காவிரி மேலாண்மை ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாவும், காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கல்லணையில் விவசாயிகள் ஆய்வுக்கு வந்த ஆணையக்குழுவினருக்கு முன்னதாக கருப்பு கொடி காட்டி, ஆணையமே திரும்பி போ என முழக்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த காவிரி உரிமை மீட்பு குழு, தமிழ் தேசிய பேரியக்கம், தமிழக விவசாயிகள் சங்கம், தமிழக ஏரி மற்றும் ஆறு பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.