புதுடெல்லி: தமிழக எல்லைக்கு அருகில் உள்ள மேகேதாட்டு என்ற இடத்தில் காவிரி நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கு, வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கடந்த 2018-ல் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கர்நாடகாவின் வரைவு திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது என காவிரி மேலாண்மை ஆணையத்தின் கடந்த 3 கூட்டங்களில் தமிழகம் வலியுறுத்தி வந்தது. தற்போது திடீரென மேகேதாட்டு திட்ட அறிக்கையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் போவதாக காவிரி ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த முடிவைக் கண்டித்து டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சுமார் 50 விவசாயிகள் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, “மேகேதாட்டு வரைவு திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விவாதத்துக்கு ஏற்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினையில் ஆணையம் நடுநிலையுடன் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட வேண்டும்.
ஆனால் பிரதமர் மோடி அரசின் அரசியல் அழுத்தத்தால் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக கர்நாடகாவுக்கு துணைபோவதை ஏற்க முடியாது. அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும். காவிரி டெல்டாவில் 2 கோடி விவசாயக் குடும்பங்கள் அகதிகளாக வெளியேற நேரிடும். எனவே கர்நாடகம் கொடுத்துள்ள வரைவு திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தினோம்” என்றார்.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, காவல் துறையினர் தங்கள் வாகனத்தில் ஏற்றிச்சென்று பின்னர் விடுவித்தனர். முன்னதாக தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விரிவான கடிதம், ஆணைய உறுப்பினர் கோபால் ராயிடம் அளிக்கப்பட்டது.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எல்.பழனியப்பன், தஞ்சை மாவட்டச் செயலாளர் எம்.மணி, உயர்மட்டக்குழு உறுப்பினர் சுதா தர்மலிங்கம், சிதம்பரம் சுரேஷ், டெல்லி முத்துவேல் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.