கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான டோஜ்காயின் தொடர்பில் தமக்கு ஏற்பட்ட இழப்பிற்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தான் காரணம் என குறிப்பிட்டு டோஜ்காயின் முதலீட்டாளர் ஒருவர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கிரிப்டோகரன்சிகள் மீது ஆரம்பத்தில் இருந்தே
அதிக ஆர்வம் செலுத்தி வந்துள்ளார்.
சமூக ஊடகங்களில் இவர் பதிவிடும் கருத்துகளே கிரிப்டோகரன்சிகளில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய தூண்டியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், டோஜ்காயின் முதலீட்டாளர் ஒருவர் தமக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு டெஸ்லா நிறுவனர் இழப்பீடு தர வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், தமக்கு ஏற்பட்ட இழப்பிற்கு பொறுப்பேற்று, 258 பில்லியன் டொலர் இழப்பீடாக எலான் மஸ்க் அளிக்க வேண்டும் என அந்த முதலீட்டாளர் கோரியுள்ளாள்ளார்.
கிரிப்டோகரன்சி சந்தையானது உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் எலான் மஸ்க் தொடர்ந்து தமக்கு விருப்பமான கிரிப்டோகரன்சிகள் குறித்து பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
மேலும், டோஜ்காயின் மூலம் டெஸ்லா நிறுவனத்தில் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்திருந்தார்.
இதனால் டோஜ்காயின் மதிப்பு எதிர்காலத்தில் நல்ல ஏற்றம் காண வழிவகுக்கலாம் என நம்பி பலரும் முதலீடு செய்தனர்.
ஆனால் கடந்த சில வாரங்களாகவே கிரிப்டோகரன்சி சந்தையில் பலத்த சரிவு காணப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் பெரும் இழப்பை எதிர்கொண்டவர்களில் ஒருவர் டோஜ்காயின் முதலீட்டாளரான கேத் ஜோன்சன்.
இவர்தான் தற்போது எலான் மஸ்க் மீதும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
டோஜ்காயின் என்பது பிரமிடு திட்டமாக இருந்தது. அதன் மூலம் டோஜ்காயினில் முதலீடுகளை அதிகரிக்க எலான் மஸ்க் முயன்றுள்ளார்.
தாம் 2019ல் இருந்து டோஜ்காயினில் முதலீடு செய்து வருவதாகவும், ஆனாலும் பெரும் இழப்பினை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் கூறியுள்ளதை நம்பிய டோஜ்காயின் முதலீட்டாளர்களுக்கு இதுவரை 86 பில்லியன் டோலர் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முதலீட்டாளர்களுக்கு இந்தத் தொகையை மஸ்க் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார், மேலும் அதைவிட இருமடங்காக இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும், அதாவது கூடுதலாக $172 பில்லியன் அளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எலான் மஸ்க் மற்றும் அவரது நிறுவனங்கள் இனி Dogecoin ஐ ஊக்குவிப்பதை தடுக்க வேண்டும் எனவும் Dogecoin வர்த்தகம் மத்திய மற்றும் நியூயார்க் சட்டத்தின் கீழ் சூதாட்டம் என்று ஒரு நீதிபதி அறிவிக்க வேண்டும் எனவும் ஜோன்சன் கோரிக்கை வைத்துள்ளார்.