ராணுவத் தேர்வுகளுக்கு தயாராகி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
இந்திய ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் எதிர்ப்பு வலுக்கிறது. பீகார், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் ராணுவ வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
இந்நிலையில், மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை அறிவித்தபிறகு ராணுவத்தில் சேருவதற்காக தயாராகி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சோரோவின் டெண்டேய் கிராமத்தைச் சேர்ந்த தனஞ்சய் மொஹந்தி என்ற இளைஞர் இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக நான்கு ஆண்டுகளாக பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அக்னிபாத் திட்டம் அறிமுகமானப் பிறகு ராணுவ பணிக்கான எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தமது கனவு நிராசையானதன் காரணமாகவே தனஞ்சய் தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக பாலசோர் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம்: ஆபத்தானதா ‘அக்னிபாத்’ திட்டம்?! – எச்சரிக்கும் முன்னாள் ராணுவத்தினர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM