புதுடில்லி: அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பு 21ல் இருந்து 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு, மத்திய அமைச்சர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ராணுவத்தில் சேர்வதற்கு இளைஞர்கள் தயாராக வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவிட் பரவல் காரணமாக ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன. எனவே, பிரதமர் மோடி இளைஞர்களின் தேவையை உணர்ந்து, அக்னிபாத் திட்டத்தில், வயது வரம்பை முதல் ஆண்டில் 21ல் 23 ஆக உயர்த்தினார். இந்த முடிவால் ஏராளமான இளைஞர்கள் பயன்பெறுவார்கள். அக்னிபாத் திட்டத்தின் மூலம், நாட்டிற்கு சேவை என்ற திசையிலும், அவர்களின் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கியும் இளைஞர்கள் முன்னேறி செல்வார்கள்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
நாட்டிற்கு சேவை செய்யவும், பாதுகாப்பு படைகளில் பணியாற்றவும் அக்னிபாத் திட்டம் ஒரு பொன்னான வாய்ப்பு. இன்னும் சில நாட்களில் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி துவங்க உள்ளது. அதற்கு தயாராகும்படி இளைஞர்களை கேட்டு கொள்கிறேன்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இளைஞர்கள், பயிற்சி முடித்து 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றவும், அதன் பிறகு தகுதியின் அடிப்படையில் பணி நீட்டிப்பு கிடைக்கவும் அக்னிபாத் திட்டம் வாய்ப்பு வழங்குகிறது. கோவிட் காரணமாக, ஆயுதப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி, கோவிட் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், அக்னிபாத் திட்டத்தில், முதல் ஆண்டில் ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பை 23 ஆக உயர்த்துவது என பிரதமர் முடிவு செய்தார். நமது இளைஞர்களின் விருப்பங்களை உணர்ந்து இந்த முடிவை பிரதமர் எடுத்துள்ளார். பெருந்தொற்று காரணமாக, நாட்டிற்காக சேவை செய்யும் வாய்ப்பை இழந்த இளைஞர்களுக்கு இந்த முடிவு உதவும். சரியான நேரத்தில், அக்கரையுடன் முடிவெடுத்த பிரதமருக்கு நன்றி
ராணுவ தளபதி மனோஜ் பாண்டே
கோவிட் பெருந்தொற்று மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, ராணுவத்தில் சேர தயாராகி வந்த இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டதன் மூலம் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆட்கள் தேர்வு செய்வதற்கான பணிகள் மற்றும் நடைமுறைகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும். ராணுவத்தில் அக்னிவீரர்களாக சேர்வதற்கான இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.