புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் 3 நாட்களாக விசாரணை நடத்தினர்.
ராகுலின் பதில்கள் திருப்தி அளிக்காததால் நேற்றும் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். கரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய் சோனியா காந்தியை பார்க்க வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையை ஏற்று நேற்று அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக விசாரணைக்கு ஆஜராக ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சோனியா காந்தி மருத்துவமனையில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராவதை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு ராகுல் காந்தி நேற்று கடிதம் எழுதினார். அந்த கோரிக்கையை ஏற்று ராகுல் காந்திக்கு 3 நாள் அவகாசம் கொடுத்துள்ளது அமலாக்கத்துறை.
இதனிடையே, முன்னதாக ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானபோது, டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்களை போலீஸார் தாக்கியதாகவும் இது தொடர்பாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரை காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று சந்தித்து கடிதம் அளித்தனர்.