விதிமீறி நிறுத்தப்படும் ‘பார்க்கிங்’ வாகனங்களை போட்டோ எடுத்து அனுப்பினால் ரூ500 பாிசுத்தொகை கிடைக்கும்: புது சட்டம் இயற்ற ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: சாலைகளில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களை போட்டோ எடுத்து அனுப்பினால், சம்பந்தப்பட்டவருக்கு ரூ. 500 வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். ஒன்றிய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘விதிமுறைகளை மீறி சாலைகளில் கார்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து கடினமாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக டெல்லியில் இதுபோன்ற விதிமீறல்கள் அதிகம் நடக்கின்றன. இந்த விதிமீறல்களை தடுக்க ஒன்றிய அரசு விரைவில் சட்டம் கொண்டு வர உள்ளது. விதிமுறைகளை மீறி சாலையில் வாகனங்களை நிறுத்தினால், அந்த வாகனத்தை புகைப்படம் எடுத்து செல்போன் மூலம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மக்களே அனுப்பலாம். அப்போது அந்த வாகன உரிமையாளரிடம் ரூ. 1000 அபராதம் வசூலிக்கப்படும். புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு ரூ. 500 வழங்கப்படும். இதுபோன்று அபராதம் வசூலிப்பதால், ‘பார்க்கிங்’ பிரச்னையை கட்டுப்படுத்த முடியும். மக்கள் தங்களது வீட்டை பெரிதாக கட்டுகிறார்கள்; ஆனால் வாகனம் நிறுத்துவதற்கான இடத்தை ஒதுக்குவதில்லை. நாக்பூரில் எனது வீட்டின் அருகில் வசிக்கும் ரொட்டி தயாரிப்பாளர் ஒருவர் இரண்டு கார்களை வைத்துள்ளார்; ஆனால் கார்களை வீதிகளில் பார்க் செய்துள்ளார். முன்பெல்லாம் அமெரிக்காவில் துப்புரவு பணியாளர் கார் வைத்திருந்தால் வியக்கத்தக்க வகையில் பார்த்தோம்; இப்போது நம் நாட்டிலேயேயும் பலர் கார் வைத்திருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர் என்றால், ஆறு கார்கள் வைத்திருக்கிறார்கள். எதற்கு என்று தெரியவில்லை’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.