தமிழக நிகழ்வுகள்
மனைவி சித்ரவதை; கொடூர கணவர் கைது
விருத்தாசலம்,-விருத்தாசலம் அருகே கர்ப்பிணி மனைவியை சித்ரவதை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த கோ.பவழங்குடி காலினியை சேர்ந்தவர் 30 வயது நபர்; லாரி டிரைவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்,தற்போது, இவரது மனைவி 8 மாத கர்ப்பமாக உள்ளார்.மனைவியைசந்தேகத்தின் பேரில், லாரி டிரைவர் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
மனமுடைந்த அவரது மனைவி, 2 மாதங்களாகதாய் வீட்டில் இருந்துள்ளார்.கடந்த 15 நாட்களுக்கு முன் லாரி டிரைவர், அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார். அதன்பின், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்காமல், கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும், மனைவியை நிர்வாணமாக்கி உடலில் சூடு வைத்து துன்புறுத்தி உள்ளார்.அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, லாரி டிரைவரை நேற்று கைது செய்தனர்.
ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 3 பேருக்கு வலை
கடலுார்,-நோயாளியை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்ற டிரைவரை வழிமறித்து தாக்கிய வாலிபர்கள் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர், 53. இவர் கடலுாரில் தனியார் ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார். கடலுார், வில்வநகரைச் சேர்ந்தவர் அஜித், 26. இவர் அரசு மருத்துவமனை வாசல் முன்பு ஆம்புலன்ஸ் வைத்துள்ளார்.நேற்று முன்தினம் கடலுார் முதுநகர் ரயில்வே போலீஸ் மாயகிருஷ்ணனின் உறவினர் புஷ்பம் என்பவர் நெஞ்சுவலி காரணமாக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவரை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு பாஸ்கர் ஆம்புலன்சில் அழைத்து சென்றார். அப்போது ஆம்புலன்சை வழிமறித்து பாஸ்கரிடம், எங்கள் ஆம்புலன்ஸ் இருக்கும் போது, நீ எப்படி இங்கு வருவாய் என கேட்டு, அஜித், அவரது நண்பர்கள் வில்வநகர் நெல்சன், 28; முகிலன், 33, ஆகியோர் அவரை தாக்கினர்.காயம் அடைந்த பாஸ்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, பின், நோயாளியை ஏற்றிச்சென்றார். பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து அஜித் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.
மகன் திருமணம் நடக்காததால் தாய் தற்கொலை
வேப்பூர்-வேப்பூர் அருகே மகனின் திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் மனமுடைந்த தாய் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பூர் அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியப்பன் மனைவி நாச்சியம்மை, 52. இவர், கடந்த சில ஆண்டுகளாக தனது மகனின் திருமணத்திற்கு வரன் தேடி வந்தார். மகனுக்கு 30 வயதாகியும் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த நாச்சியம்மை நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டின் முதல் தளத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மனைவிக்கு கத்திகுத்து: ஓய்வு டாக்டர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சியில் ஓய்வூதிய பணத்தைக் கேட்டு தொல்லை செய்த மனைவியை கத்தியால் குத்திய ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.கள்ளக்குறிச்சி, சிறுவங்கூர் ரோடு, கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் உத்திரகோட்டி, 67; ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர்.இவரது முதல் மனைவி ரேணுகாதேவி, 54; இவர் உத்திரகோட்டியின் ஓய்வூதியம் பணத்தை கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த உத்திரகோட்டி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியால் ரேணுகாதேவியின் கழுத்தில் குத்தினார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் உத்திரகோட்டி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
போதை கணவரால் மனைவி தற்கொலை
கள்ளக்குறிச்சி,-சின்னசேலம் அருகே கணவரின் மது பழக்கத்தால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.சின்னசேலம் அடுத்த தத்தாதிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் மனைவி பவித்ரா, 22; இருவரும் காதலித்து கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஒன்றரை வயதில் தீபன் என்ற மகன் உள்ளார். பாண்டியனுக்கு இருந்த குடிப்பழக்கத்தை பவித்ரா கண்டித்தார். இருப்பினும், பாண்டியன் குடிப்பழக்கத்தை விடவில்லை. கடந்த 10ம் தேதி காலையிலேயே மது குடித்த விட்டு வந்ததால், மனமுடைந்த பவித்ரா, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.படுகாயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் அங்கு கடந்த 14 ம் தேதி இறந்தார். கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிறுமியிடம் நகை பறிப்பு; 2 பேருக்கு தர்ம அடி
கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி அருகே சிறுமியிடம் நகை பறித்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.சின்னசேலம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி கவிதா, 42; இவர், கடந்த 14ம் தேதி தனது மகள் தாராஷினியுடன், 7; தென்கீரனுாரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அன்று இரவு 9:30 மணியளவில் 2 பேர் தாராஷினியின் கழுத்தில் இருந்த 1 சவரன் செயினை பறித்துக் கொண்டு கொண்டு தப்பியோடினர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் கிருஷ்ணகுமார், 22; வாசு மகன் பாபுராஜ், 23; என்பது தெரியவந்தது. பொதுமக்கள் தாக்கியதில் காயமயடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மேலும், திருட்டு ஆசாமிகளை தாக்கியதாக அதே ஊரைச் சேர்ந்த மாதேஸ்வரன், செந்தில்குமார், பண்டேரி ஆகியோர் மீதும் வழக்குப் பதிந்தனர்.
வியாபாரியிடம் ரூ 6.3 லட்சம் அபேஸ்
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே வியாபாரியிடம் 6.30 லட்சம் ரூபாயை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி அடுத்த ஏர்வாடியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் மகன் சையது புகாரி, 34; சிப்ஸ் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக தனியார் சொகுசு பஸ்சில் கடந்த 8ம் தேதி சென்னைக்குச் சென்றார். அதிகாலை 4:20 மணியளவில் பஸ் உளுந்துார்பேட்டை அடுத்த காந்திநகர் அருகே உள்ள டீ கடையில் நின்றது.அப்போது சையது புகாரி பையில் வைத்திருந்த 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை அவரது சீட்டின் அடியில் வைத்து விட்டு டீ குடிக்கச் சென்றார். டீ குடித்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, பணப்பையைக் காணவில்லை. இது குறித்து சையது புகாரி நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பைக் மோதி பெண் பலி
பிராட்வே, சென்னை அடுத்த மீஞ்சூரை சேர்ந்தவர் தினேஷ், 30. பாரிமுனை, தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் மதியம், ‘ஜாவா’ பைக்கில் வேலைக்கு சென்றார்.ராயபுரத்தில் இருந்து பாரிமுனை செல்லும் ராஜாஜி சாலையில், துறைமுகம் ஐந்தாவது வாயில் அருகே சாலையை கடக்க முயன்ற, நடைபாதையில் வசிக்கும் பவானி, 50, மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.படுகாயம் அடைந்த பெண் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். வழக்குப்பதிவு செய்த யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உலக நிகழ்வுகள்
ரஷ்யாவில் போதைப் பொருள் கடத்திய மாடல் அழகிக்கு 20 ஆண்டு சிறை?
மாஸ்கோ-ரஷ்யாவில், போதைப்பொருள் கடத்தியதாக, அழகி போட்டியில் பரிசு வென்றவரும், பிரபல மாடலுமான கிறிஸ்டியானா துகினா கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.ரஷ்யாவில், 2.5 கிராமுக்கு மேல் போதைப் பொருள் வைத்திருந்தால், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அந்நாட்டில் சிறையில் உள்ள மூவரில் ஒருவர் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.
இந்நிலையில், அழகி போட்டியில் வென்றவரும், மாடல் அழகியுமான கிறிஸ்டியானா துகினா, 34, அரை கிலோ போதைப் பொருள் வைத்திருந்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவர், 2019ல் நடந்த மிஸ் துபாய் அழகிப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு அழகி போட்டிகளில் அவர் பரிசுகள் வென்றுள்ளார். நீதிமன்றத்தில் இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது.
பெட்ரோலுக்காக காத்திருந்த ஆட்டோ டிரைவர் மரணம்
கொழும்பு-இலங்கையில் பெட்ரோல் வாங்க இரவு முழுதும் காத்திருந்த ஆட்டோ டிரைவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. இங்கு, வாகன ஓட்டுனர்கள் நீண்ட வரிசையில் நாள் முழுதும் காத்திருந்து, பெட்ரோல், டீசல் வாங்கும் நிலை உள்ளது. இந்நிலையில், தலைநகர் கொழும்பு அருகே பனதுரா பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு, நேற்று முன்தினம் இரவு ஆட்டோ டிரைவர் ஒருவர் சென்றுள்ளார். நீண்ட வரிசையில் நேற்று காலை வரை காத்திருந்த அவர், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக, ஆட்டோவிலேயே மரணம் அடைந்தார்.இலங்கையில், ஏற்கனவே பெட்ரோல், டீசல் வாங்க காத்திருந்த சிலர், கடும் வெயிலுக்கு பலியாகியுள்ளனர். இதற்கிடையே புகாடா நகரில், நேற்று முன்தினம் இரவு சமையல் ‘காஸ்’ சிலிண்டர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவரும் மரணம் அடைந்தார். இந்நிலையில் இலங்கையின் பல பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு பல மணி நேரம் காத்திருக்கும் மக்கள் பொறுமையிழந்து சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். இந்தியாவிலிருந்து டீசல் ஏற்றிச் சென்ற கப்பல், நேற்று இலங்கையை அடைந்தது. இந்த டீசல் அடுத்த மூன்று நாட்களில் விநியோகிக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.