நெல்லையில், கஞ்சா விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்த ஆத்திரத்தில் அண்ணன், தம்பியை கொடூரமாக கொலை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த வெங்காய வியாபாரியான மணிகண்டன், தனது 13 வயது தம்பி சபரீஸ்வரனுடன் வெங்காயம் விற்க கடந்த 1ம் தேதி நெல்லைக்கு வந்துள்ளார்.
இருவரும் வீடு திரும்பாததாலும் செல்போன் மூலமும் தொடர்பு கொள்ள முடியாததாலும் அவர்களது தந்தை போலீசில் புகாரளித்தார்.
இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில், கொண்டாநகரம் டாஸ்மாக் பின்புறத்தில் உள்ள ஓடையில் கைகள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் மணிகண்டனின் சடலம் மீட்கப்பட்டது. சிறுவன் சபரீஸ்வரனின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இது தொடர்பாக சகோதரர்களான சதீஷ்குமார் மற்றும் பார்த்திபனை கைது செய்து போலீசார் விசாரித்த போது, மணிகண்டன் கடனாக வாங்கிய 10 ஆயிரம் ரூபாயை திருப்பி தராததாலும் கஞ்சா விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததாலும் இருவரையும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.