திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், 2018-ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “அரசின் எவ்வித அனுமதியுமின்றி சுற்றுலா அலுவலகத்தை நடத்தி வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் சதீஷ்குமார் அளித்த புகார் உண்மையென தெரியவந்தது. இந்த மோசடியில் ஈடுபட்ட சென்னை போரூர் கிருஷ்ணாநகரைச் சேர்ந்த முகமது ரபீ (54) என்பவர் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் முகமது ரபீ சில தினங்களுக்கு முன்பு சிக்கினார். அவரிடம் மோசடி தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், முகமது ரபீயைக் கைதுசெய்தனர். விசாரணையில் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி சுமார் நாற்பது பேரிடமிருந்து எழுபது லட்சம் ரூபாய்க்கு மேல் முகமது ரபீ பெற்றதும், அதற்காக போலி ஆஃபர் ஆர்டர்களை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “சுற்றுலா விசாவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வது சட்டத்துக்கு புறம்பானது. அதனால் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்கு முன்பு குடிபெயர்வோர், பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் சந்தேகங்களை சரிசெய்து கொள்ள வேண்டும். கடைசி நேரத்தில் விமான நிலையத்தில்வைத்து புரோக்கர்கள் தரும் விசாக்களை நம்பி வெளிநாடுகளில் வேலைக்குச் செல்ல வேண்டாம். பயணத்துக்கு முன்பே விசாவினைப் பெற்று சம்பந்தப்பட்ட குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்புகொண்டு விசாரித்து நம்பிக்கைதன்மையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பதிவு பெறாத முகவர்கள் வழங்கும் விமான டிக்கெட், விசா ஆகியவை ஆன்லைன் மூலம் பெறப்படுவதால் கடைசி நேரத்தில் அவை ரத்து செய்யப்பட்டு அதற்கான பணத்தை திரும்பப் பெற்று பொதுமக்களை ஏமாற்றிவிடலாம். எனவே விசாரணை செய்யாமல் எக்காரணத்தைக் கொண்டும் பணத்தையும் பாஸ்போர்ட்டையும் இவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம்.”