சென்னை: 1969 முதல் 2018 வரையிலான பிறப்பு, இறப்புகள் சிஎஸ்ஆர் பிரதியை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது பிறப்பு இறப்பு பதிவேடுகள் ரூ.75 லட்சம் செலவில் இணையத்தில் பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். இதன்படி இந்த திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதன்மூலம் பொதுமக்கள் எவ்வித இன்னல்களுமின்றி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்திட 1969ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நிகழ்ந்த பிறப்பு, இறப்பு பதிவேடுகளை சி.எஸ்.ஆர். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் வருவாய்த்துறை, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறைச் சார்ந்த பிறப்பு, இறப்பு பதிவாளர்களால் 16,348 பதிவு மையங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் 2018 க்கு பிறகு இறப்பு தொடர்புடைய துறைகளால் பிறப்பு, இறப்பு பதிவுப் பணி வெவ்வேறு மென்பொருள்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதனால் பிறப்பு, இறப்பு பதிவுத்திட்டத்தைக் கண்காணிப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஒரே சீரான மென்பொருள் பொதுசுகாதாரத்துறையில் உருவாக்கப்பட்டு, அரசு ஆணையின்படி அனைத்து தொடர்புடைய துறைகளின் பிறப்பு, இறப்பு பதிவாளர்களால் 2018 முதல் அனைத்து பதிவு மையங்களிலும் இணையதளம் மூலம் பிறப்பு, இறப்பு பதிவுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டத்தில் முதல்கட்டமாக 2013 முதல் 2017 வரை ஊராட்சி, பேரூராட்சி, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திட்டப் பகுதிகளில் பிறப்பு, இறப்பு பதிவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் பிறப்பு, இறப்பு பதிவேடுகளை கணினிமயமாக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இது குறித்து அனைத்து சுகாதார துறையின் துணை இயக்குநர் மற்றும் கூடுதல் மாவட்ட பிறப்பு, இறப்பு பதிவாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணியை மேற்கொள்ள விரிவான தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட பிறப்பு, இறப்பு பதிவாளர்களுக்கு இது தொடர்பான விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.