28 ரூபாய்க்காக ஆட்டோவை சேஸ் செய்து உயிரிழந்த இளைஞர் – ரூ.43 லட்சம் வழங்க உத்தரவு!

மகாராஷ்டிர மாநிலத்தில், 28 ரூபாய் மீதித் தொகைக்காக, ஆட்டோவை சேஸ் செய்த போது உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு, 43 லட்சம் ரூபாய் வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி, சேத்தன் அசிர்நேகர் என்ற 26 வயது இளைஞர், மும்பையில் உள்ள விக்ரோலி கிழக்கு என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிற்கு ஆட்டோவில் சென்றார். வீடு வந்தடைந்தும், ஆட்டோ ஓட்டுனர் கம்லேஷ் மிஸ்ராவிடம், 200 ரூபாய் கொடுத்தார். பயணக் கட்டணமாக, 172 ரூபாய் போக, மீதி 28 ரூபாயை கம்லேஷ் மிஸ்ரா திருப்பி கொடுக்கவில்லை.

இதை அடுத்து, மீதித் தொகையை கொடுக்கும்படி ஆட்டோ ஓட்டுனரை, சேத்தன் அசிர்நேகர் சேஸ் செய்தார். அப்போது அவர் மீது ஆட்டோ ஏறியதால் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேத்தன் அசிர்நேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தை வீட்டின் வாசலில் இருந்து சேத்தன் அசிர்நேகர் குடும்பத்தினர் பார்த்தனர். கண்முன்னே மகன் உயிரிழந்த சம்பவம், அந்த குடும்பத்தை பெருமளவில் பாதித்தது.

இந்த விவகாரம் குறித்து, சேத்தன் அசிர்நேகர் குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்தனர். அதில், மகன் மரணத்தால், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தனர். இதற்கிடையே, இது தொடர்பாக, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது.

இதை விசாரித்த தீர்ப்பாயம், சேத்தன் அசிர்நேகர் பிரேதப் பரிசோதனையில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட படுகாயங்களால் அவர் உயிரிழந்ததாகவும், ஆட்டோ ஓட்டுனரின் அவசரம் மற்றும் அலட்சியதால் இந்த மரணம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தது. மேலும், சேத்தன் அசிர்நேகர் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு, 43 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை, இன்சூரன்ஸ் நிறுவனமும், ஆட்டோ உரிமையாளரும் வழங்க வேண்டும் என, தீர்ப்பாயம் அறிவுறுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.