9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக பூஸ்டர் தடுப்பூசி இடைவெளி காலம் குறைப்பு: மீண்டும் தொற்று வேகமெடுப்பதால் முக்கிய முடிவு

புதுடெல்லி: பூஸ்டர் தடுப்பூசி இடைவெளி காலத்தை 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைக்க தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதனால், இதுதொடர்பான அறவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. நாடு முழுவதும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தினசரி கொரோனா தொற்று  பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் (புதன்) நாடு  முழுவதும் 8,641 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று  சுமார் 12 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கொரோனா  பாதிப்பில் இருந்து மீள, தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டவர்கள் 90 நாட்களுக்குப் பிறகு  பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்ட நோய்த் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது தொடர்பாக தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தொழில்நுட்ப துணைக் குழு, கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்கும், பூஸ்டர் டோஸுக்கும் இடையிலான இடைவெளி காலத்தை குறைக்க பரிந்துரைத்துள்ளது. அதன்படி, 9 மாதங்கள் இடைவெளி என்றிருந்த நிலையில், அதனை 6 மாதங்களாக குறைக்கலாம் என்று குழு பரிந்துரைத்துள்ளது. அதனால், 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபருக்கும் இரண்டாவது தடுப்பூசி டோஸ் போட்டு 6 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். வரும் 29ம் தேதி மேற்கண்ட பரிந்துரை தொடர்பான இறுதி முடிவை தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.