பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சமீப காலமாக தடலாடியான அரசியல் கருத்துகளைப் பேசி வருகிறார். இது அவரின் சமூக வலைதளங்கள் தொடங்கி திரைப்படம் வரை வெளிப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவரான மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்ட `தலைவி’ படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து மற்றுமொரு அரசியல் ஆளுமையான இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தைத் தழுவி எடுக்கப்படவுள்ள `எமெர்ஜென்சி’ எனும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கங்கனா இயக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல். ஜான்சிராணியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட `மணிகர்ணிகா’ படத்தை தயாரித்த `மணிகர்ணிகா பிலிம்ஸ்’ இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கும் கங்கனா, இதற்காக பிரத்யேகமான வடிவமைப்புடன் மேக்கப் செய்ய லண்டன் சென்றுள்ளார். இக்கதாபாத்திரத்திற்கான மேக்கப் மற்றும் வடிவமைப்பை டேவிட் மாலினோவாஸ்கி என்பவர் செய்கிறார். இவர் ஏற்கெனவே வின்ஸ்டன் சர்ச்சில் கதையை வைத்து எடுக்கப்பட்ட `டார்க் ஹவர்’ படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.