Presidential Election: குடியரசு தலைவர் தேர்தல்: 14 பேர் அடங்கிய பாஜக குழு அமைப்பு!

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, 14 பேர் அடங்கிய மேலாண்மை குழுவை, மத்தியில் ஆளும் பாஜக அமைத்துள்ளது.

இந்தியத் திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், தேர்தல் நடைபெறாமல், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். தேர்தல் நடைபெற்றால், குடியரசுத் தலைவரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பர்.

இதற்கிடையே, கடந்த 15 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக, டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மலிகார்ஜுனா கார்கே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளது. இந்தக் குழுவின் அடுத்த கூட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது, குடியரசுத் தலைவர் வேட்பாளர் இறுதி செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, 14 பேர் அடங்கிய மேலாண்மை குழுவை, பாஜக அமைத்துள்ளது. அதில் மத்திய அமைச்சர்களும், தேசிய செயலாளர்களும் இடம் பெற்றுள்ளனர். அதன் ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் செயல்பட உள்ளார்.

அதே போல் அஸ்வினி வைணவ், கிஷன் ரெட்டி, பாரதி பவார் உள்ளிட்டோர் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவில் தமிழகத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் இடம் பெற்றுள்ளார். இந்தக் குழு, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாகவும், அவருக்கு ஆதரவு திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.