லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான `விக்ரம்’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் `சக்ஸஸ் மீட்’ சென்னையில் நடந்து வருகிறது. அதில் கமல்ஹாசன் பேசியது இதோ…
“ஒரு படத்தின் வெற்றிக்கு நான் காரணம் என ஒருவர் சொல்ல முடியாது. சினிமா தெரிஞ்சவங்களுக்கு அது தெரியும். RKFI என்பது நான்கு எழுத்துன்னு நினைச்சுட்டு இருக்கீங்க. அதுக்கு பின்னாடி 40 பேர் இருக்காங்க. முக்கியமா மூணு பேரு. அதுல சந்திரஹாசனையும் டி.என்.எஸ்ஸையும் இழந்திருக்கிறேன். அவர்கள் இடத்தை மகேந்திரனும் டிஸ்னியும் நிரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். பேர் தெரியத் தேவையில்லை என ஒதுங்கி நிற்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
சினிமாவில் வேலை கிடைக்கணும் என வந்தவன் நான். நடிப்பதற்காக சினிமாவுக்கு வரவில்லை. அதனைக் காட்டியவர் பாலசந்தர். உங்களை மாதிரி டெக்னீசியன் ஆகணும்னு சொன்ன போது, ‘அட, போடா. ஆட்டோவுக்கு அலையுற. உனக்கு கார் வாங்கி தரேன். நீ நடி. அப்புறம் பாரு’ என என்னை நடிக்க வைத்தவர் பாலச்சந்தர். அவர் படங்களில் மட்டுமே வெவ்வேறு ரோல் பண்ணிட்டு இருந்தா போதும் என இருந்தவனுக்கு பல வெற்றிகளைத் தமிழக மக்களும், தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கொடுத்திருக்கிறார்கள்.
பத்து வருட காலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் என்னால் வெளியிட முடிந்த ஒரே படம் இதுதான். அதற்குக் காரணம் மகேந்திரன், உதயநிதி ஸ்டாலின். இவர்கள்கூட இருப்பதால்தான் என்னால் தைரியமாக இருக்க முடிந்தது. உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடித்தாலும், பாலிடிக்ஸ் பண்ணினாலும் இதை மட்டும் விட்டுவிடாதீர்கள் எனக் கேட்டு கொள்கிறேன். இத்தனை நேர்மையோடு பட விநியோகத்தை மேற்கொள்வது நிச்சயம் இந்தத் துறைக்கு அவசியம்.
டிவி நிகழ்ச்சி பண்ணும் போது நிறைய பேர் கிண்டல் அடித்தார்கள். எனக்கு நெருக்கமானவங்ககூட என் கையைப் பிடித்து கொண்டு சின்னத்திரைக்குப் போகாதீர்கள் என்றார்கள். ஆனால் நான் சுதாரித்துக் கொண்டேன். அதன் பலன் என்னால் பல வீடுகளுக்கு செல்ல முடிந்தது. என்னுடைய ப்ரோமோஷன் பிக் பாஸ்ல இருந்து ஆரம்பிச்சுருச்சு.
இந்த வெற்றி எளிதாக வந்ததில்லை. அதனால் நானும் இந்த வெற்றியை எளிதாக எடுத்து கொள்ள மாட்டேன். சாய்ஞ்சு படுத்தர மாட்டேன். தெளிவாக நிமிர்ந்து உட்கார்ந்து எப்படி எங்கள் ஆடியன்ஸ் ரசிக்கிறார்களோ அதுபோல அதைவிட பதற்றமாக நாங்கள் சீட் நுனியில் அமர்ந்து வேலை செய்வோம்.
உழைக்கும் மக்கள் தங்கள் கூலியின் ஒரு பகுதியை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதுதான் உண்மையான வெற்றி. அவர்களுக்கு எல்லாம் நான் நன்றி சொல்வது அவர்களுக்குப் புரியும் என நம்புகிறேன்.
புஷ்பா, RRR, KGF பார்த்து பொறாமைப்பட்டார்களா என எனக்குத் தெரியாது. நாங்கள் குளிக்கும் குளம் இந்தக் கலையுலகம். எங்களுக்கு மொழி வித்தியாசமே இல்லை. அதனால் அவங்க படமும் ஜெயிக்கணும். நம்ம படமும் ஜெயிக்கணும். என் திறமைக்கு அதிகமாகவே தமிழக மக்கள் என்னைத் தூக்கி கொண்டாடி இருக்கிறார்கள். நல்ல படத்தை மக்கள் ஒருபோதும் விட்டுவிட மாட்டார்கள். எங்கள் நன்றியும் பெருமிதமும் சொல்லி மாளாது” என்று நெகிழ்ச்சியுடன் பேசி முடித்தார்.