அரியலூர் மாவட்டம் கீழக்குடியிருப்பு பகுதியில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, மீண்டும் நிலத்தை மீட்டுத் தந்ததற்கான பாராட்டு விழாவில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ். “ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, நிலத்தை அரசின் உத்தரவுக்கு இணங்க மீண்டும் விவசாயிகளிடம் விரைவில் வழங்க வேண்டும். அவர்களுக்கான அடிப்படை வசதிகள், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலம் வைத்திருந்ததற்கான இழப்பீடு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும்.
அரசு சிமெண்ட் ஆலையால் ஏற்படும் விபத்துக்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2026 தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைமையில் ஆட்சி அமையும். அதற்கான வியூகம் 2024-ல் எடுக்கப்படும். மத்திய அரசின் அக்னிபத் தேவையில்லாத திட்டமாகும். ராணுவத்தில் ஈடுபடுபவர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் நான்கு ஆண்டுகள்தான் வேலை என்பதால் ராணுவத்தில் முழுமையாக ஈடுபட மாட்டார்கள்.
எனவே ராணுவத்தில் சேர்பவர்கள் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டுமென்றால் அவர்கள் முழுமையாக ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். எனவே இத்திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று கொரோனா பேரிடரைச் சிறப்பாகக் கையாண்டார்கள். ஆனால், அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாது மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
நீட் தேர்வுக்காக 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது தவிர்க்கப்பட வேண்டும். நீட் விலக்கு என்பது சாத்தியமான ஒன்றுதான். எனவே மத்திய அரசு தமிழகத்திற்குக் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்காவது நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வரத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் காவல் நிலையங்களில் விசாரணை கைதிகள் உயிரிழப்பது தவிர்க்கப்பட வேண்டும். காவல் நிலையங்களில் வெளியில் மட்டுமல்லாமல் காவல் நிலையங்களுக்கு உள்ளேயும் சிசிடிவி கேமரா பொருத்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வகையான உயிரிழப்பிற்குக் காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளால், பல்வேறு நோய்கள் மற்றும் சாலை விபத்தினால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்
தொடர்ந்து, “எண்ணிக்கையில் வேண்டுமென்றால் அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கான தேவையான டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடி அதில் வெற்றி பெற்று வருவது பாமக தான்.
எனவே பாமக தான் எதிரி கட்சியாக இல்லாமல் உண்மையான எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறது” என்றார். மேலும் அதிமுக-வில் நிலவும் உட்கட்சி பூசல் சசிகலா குறித்துக் கேட்டபோது, “அது உட்கட்சிப் பிரச்னை அதற்கு நான் கருத்து தெரிவிப்பது சரியானதல்ல” என்றார்.