இந்திய ராணுவத்தில் புதிய முறையில் ஆள்சேர்க்கும் விதமாக, `அக்னிபத்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள்முதலே, இத்திட்டத்துக்கு பல தரப்புகளிலிருந்து ஆதரவுகளும், எதிர்ப்புகளும் வந்துகொண்டே இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்துக்கு எதிராக, இளைஞர்கள் போராட்டங்களும் நடத்திவருகின்றனர். அதிலும் பீகார், தெலங்கானா போன்ற மாநிலங்களில் போராட்டத்தில் ரயில்களுக்கு தீவைப்பு சம்பவம் என போராட்டக்களம் கலவரமாக மாறியது.
இந்த நிலையில் இத்தகைய போராட்டங்கள் மற்றும் கலவரங்களுக்கு மத்தியில், துணை ராணுவமான, மத்திய ஆயுத காவல்படையில் அக்னிபத் வீரர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய ஆயுத காவல்படை(CAPF) மற்றும்அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவில் ஆள்சேர்ப்புக்காக, அக்னிபத் வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பைத் தாண்டி 3 ஆண்டுகள் வயது தளர்வு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முதல் பேட்ச் அக்னிபத் வீரர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பைத் தாண்டி 5 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படும். மேலும், மத்திய ஆயுத காவல்படை மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆள்சேர்ப்பில், அக்னிபத் வீரர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது” என அறிவித்துள்ளது.