இந்திய ராணுவப்படையில் புதிய முறையில் ஆள்சேர்க்கும் விதமாக, ஜூன் 14 அன்று மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு அறிமுகப்படுத்தப்பட்ட `அக்னிபத்’ திட்டத்துக்கு நாடுமுழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. மேலும், `அக்னிபத்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், தெலங்கானா மாநிலங்களில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில், தெலங்கானாவில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமின் தலைவரான அசாதுதீன் ஒவைசி, அக்னிபத் திட்டத்தை மோடி திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனியார் ஊடகத்திடம் இன்று பேசிய ஒவைசி, “அக்னிபத் திட்டம் என்பது முற்றிலும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தவறான முடிவு. அதுமட்டுமல்லாமல், இத்திட்டமானது நாட்டுக்கு சரியானதுமல்ல. பிரதமர் மோடி, நமது கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களை, ஒப்பந்த ஊழியர்கள் என நினைக்கிறார். ஆனால், அவர்களின் பணி மிகவும் மரியாதைக்குரியது.
மோடியின் தவறான முடிவால், இளைஞர்கள் இன்று சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் தனது பொறுப்பற்ற முடிவால், அதன் எதிர்விளைவுகளை மோடியே எதிர்கொள்ள வேண்டும். மேலும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு, வேளாண் சட்டங்களை ரத்து செய்ததுபோல, அக்னிபத் திட்டத்தையும் மோடி திரும்பப்பெற வேண்டும்” என்று கூறினார்.
அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்ததையொட்டி மத்திய உள்துறை அமைச்சகம், அக்னிபத் வீரர்களுக்கு இந்திய துணை ராணுவத்தில் 10% இடஒதுக்கீடு செய்ய முடிவெடுத்திருப்பதாக இன்று காலை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.