டெல்லி : அக்னிபாத் திட்டத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. முப்படைகளில் குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 13ம் தேதி அறிவித்தது. இதன்படி 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகால ராணுவ பணியில் சேரலாம். இவர்களில் 75 சதவீதம் பேர் 4 ஆண்டுக்குப் பின் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். அவர்களுக்கு பென்சன் கிடையாது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கான முந்தைய நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கொந்தளித்துள்ளனர். இதனால், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த திட்டத்தின் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பினரை ராணுவத்தில் புகுத்தி பயிற்சி அளிக்க பாஜக திட்டமிடுவதாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் அக்னிபாத் திட்டம் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தி டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த திட்டத்தால் ஏற்படும் தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் மற்றும் ராணுவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.