மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி ரயில்வே சந்திப்பு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராணுவத்தில் இளைஞர்களை 4 ஆண்டுகள் பணியமர்த்தும் திட்டமான அக்னிபாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. வன்முறையை கட்டுப்படுத்த அங்கு ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி ரயில்வே சந்திப்பு முன்பாக திரண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பேரணியாக சென்றனர். மேலும், போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்தனர். ரயில் நிலையங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்வதால், திருச்சி ரயில்வே சந்திப்பில் தடுப்புகளை அமைத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக ரயில்வே சந்திப்பு பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM