வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அக்னிபத் திட்டத்தில் தேர்வாகும் ‛அக்னிவீரர்‛களுக்கு துணை ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நம் ராணுவத்தில், ‘அக்னி வீரர்’கள் என்ற புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அக்னிபத் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு, 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். நான்கு ஆண்டுகளுக்குப் பின், 25 சதவீதம் பேர் முப்படைகளில் சேர்த்து கொள்ளப்படுவர்.இத்திட்டத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பீஹார் மற்றும் உ.பி., மாநிலங்களில் ரயில் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு படைகளிலும் ஆள் சேர்ப்புக்காக அக்னிவீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல் ஆண்டில் அக்னிபத் திட்டத்தில் தேர்வானவர்களுக்கு வயது வரம்பில் 5 வரம்பு அளிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement