சென்னை: மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வரும் சூழலில் இன்று (ஜூன் 18) காலை முதல் சென்னையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தலைமைச் செயலகம் அருகே திரண்ட இளைஞர்கள் அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
கரோனாவால் இரண்டு ஆண்டுகளாக ராணுவத்தில் ஆள் சேர்ப்புக்கான தேர்வு நடைபெறாத நிலையில் அத்தேர்வை நடத்துமாறு இளைஞர்கள் கோரினர். ‘எங்களுக்கு நீதி வேண்டும்’, ‘தேர்வுகளை நடத்துங்கள்’ போன்ற பதாகைகளையும், தேசியக் கொடியையும் ஏந்தியவாறு இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
ஆரணி, திருவண்ணாமலை, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களே பெருமளவில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நேற்று வேலூரில் இளைஞர்கள் சிலர் அறவழியில் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து இளைஞர்கள் பெரும் அளவில் ராணுவத்தில் சேர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவிப்பும்; எதிர்ப்பும்: ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக் கொள்ளும் ‘‘அக்னி பாதை’’ திட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 13-ம் தேதி அறிமுகம் செய்தார். இந்நிலையில் இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக பிஹாரில் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிஹார், உ.பி., ஹரியாணா என வட மாநிலங்களில் ஆரம்பித்த போராட்டம் நேற்று தெலங்கானாவுக்கும் பரவியது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தீவைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பிஹார் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 12 ரயில்களுக்கு தீவைக்கப்பட்டன. போராட்டம் நாடு முழுவதும் சுமார் 300 ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4வது நாளாக போராட்டம்: இந்நிலையில், இன்று 4வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இந்த போராட்டத்தால் 12 ரயில்கள் எரிக்கப்பட்டன. நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் வன்முறையை தவிர்க்குமாறும், ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக போராட்ட பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.