சென்னை: அதிமுக தீர்மானக்குழுவின் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இன்று மாலை மற்றும் நாளையும் ஆலோசனை தொடரும் என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டி எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஒற்றைத் தலைமை பிரச்சினை குறித்து கடந்த ஐந்து நாட்களாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருதரப்பிலும் தனித்தனியே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தீர்மானக்குழு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்று வருகிறது.
இன்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வ தற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வந்திருந்தார். மேலும் பொன்னையன், வைகைச்செல்வன், ஆர்.வி உதயகுமார், வைத்திலிங்கம், செம்மலை, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்ட அதிமுகவின் முக்கியப் பிரமுகர்களும் இதில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர். அப்போது, அதிமுக தலைமையகத்தின் வெளியே ஒபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி நடந்த மோதலில் ஒருவருக்கு ரத்தகாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர் மாரிமுத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரா எனக்கேட்டு தாக்கினார்கள் என்று அவர் புகார் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிமுக தலைமையகம் பரபரப்பாக காணப்படுகிறது. இதைடுத்து ஓபிஎஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், அதிமுக தீர்மானக்குழுவின் கூட்டத்தில், இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. அதனால், இதுகுறித்து இன்று மாலை மற்றும் நாளை ஆலோசனை தொடரும் என தெரிவித்தார்.