அதிமுக: `ஸ்பாட்’ தீர்மானம்… எடப்பாடியின் பொதுக்குழு பிளான்!

`இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்… இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’ என்கிற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள் இன்றைய அ.தி.மு.க-வுக்கு அப்படியே பொருந்துகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.தி.மு.க-வைப் பற்றியப் பேச்சுதான் ஊரெங்கும் ஒலிக்கிறது. அந்தளவுக்கு ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் சூடாகியிருக்கிறது. எப்போதும் பிரச்னைகளை மனதுக்குள் போட்டுப் புதைத்துக்கொள்ளும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இந்தமுறை வாழ்வா சாவா பிரச்னை என்பதால், பொங்கி எழுந்துவிட்டார். ஜூன் 16-ம் தேதி வெளிப்படையாக மீடியா முன்பு பேட்டிக் கொடுத்து, அனைத்தையும் உடைத்துவிட்டார் பன்னீர். ஓ.பி.எஸ்-ஸின் கையெழுத்தின்றி ஒற்றைத் தலைமை என்பது சாத்தியமல்ல என்ற நிலை இருக்க, அதையும் சரிகட்ட எடப்பாடி தரப்பு பலே வியூகம் வகுத்துள்ளதாம்.

பன்னீர் – எடப்பாடி

இதுபற்றி நம்மிடம் பேசிய எடப்பாடி ஆதரவாளர்கள், “பொதுவாக தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸிடம் மீடியாக்கள் கேள்வி கேட்கும்போது, ‘பொதுக்குழுக் கூடி முடிவுசெய்யும்’ என்பார். ஆனால், ‘ராமதாஸும், அன்புமணியும்தான் பொதுக்குழு என்பது அக்கட்சியினருக்கு நன்றாகவே தெரியும்’. அதுபோல, கட்சி என்றால் அதன் தலைமையில் யார் இருக்கிறார்களோ, அல்லது நிர்வாகிகளின் ஆதரவு யார் பக்கம் இருக்கிறதோ அவர்கள் நினைப்பது நடக்கும். அப்படித்தான் ஓ.பி.எஸ் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், ஒற்றைத் தலைமை என்பது சாத்தியப்படும்.

ஏனெனில், சமீபத்தில் உட்கட்சித் தேர்தல் நடந்தபோது பொதுக்குழு உறுப்பினர்களுக்கானத் தேர்தலும் நடைபெற்றது. ஒன்றியம், பகுதி மாவட்டத்திலிருந்து பொதுக்குழுவுக்குச் சுமார் 800 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி, நகரம், ஒன்றியம், வட்டம், பகுதி, மாவட்டம் ஆகியப் பொறுப்புகளில் இருப்பவர்களும், தலைமைக் கழகப் பொறுப்புகளில் இருப்பவர்களும், எம்.எல்.ஏ-க்களும், எம்.பி-க்களும் தானாக பொதுக்குழு உறுப்பினராக ஆகிவிடுவார்கள். இதன்மூலம் சுமார் 2,500 பேர் ஜூன் 23 பொதுக்குழுவில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதைத்தாண்டி, ஒவ்வொரு முறையும் சிறப்பு அழைப்பாளர்கள் என்கிற பெயரில், அணிகளின் நிர்வாகிகள் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் அழைக்கப்படுவார்கள். இந்தமுறை அத்தகைய சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதியில்லை. அதனால், இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களில் 80 சதவிகிதம் பேர் எடப்பாடியை ஆதரிப்பவர்கள்தான்.

பன்னீர் – எடப்பாடி

சமீபத்தில் பிரச்னை வெடித்த ஆலோசனைக் கூட்டத்தில், மாதவரம் மூர்த்திதான் முதன்முதலில் ஒற்றைத் தலைமைக் குறித்துப் பேசினார். எடப்பாடியின் திட்டத்தின்படியே மூர்த்தி பேசினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோல, பொதுக்குழுவில் தீர்மானங்களை எல்லாம் வாசித்துமுடித்துவிட்டு, நன்றியுரைக் கூறுவதற்கு முன்பாக எடப்பாடிக்கு ஆதரவாக ஒருவரைப் பேசவைக்க மூவ் நடந்துவருகிறது. அநேகமாக எடப்பாடியின் நிழல்போல இருக்கும் மாவட்டச் செயலாளர் சேலம் இளங்கோவன் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைக் குறித்துப் பேச வாய்ப்புள்ளது.

பொதுக்குழு தொடங்கும்வரை ஒற்றைத் தலைமைக் குறித்து எந்த கருத்தும் எழாது என்று பன்னீர் தரப்பை ஏமாற்றிவிட்டு, பொதுக்குழு முடிவில் ஒற்றைத் தலைமைக் குறித்துப் பேசி அங்கேயே ஸ்பாட் தீர்மானத்தையும் நிறைவேற்ற எடப்பாடித் தரப்புக் காய்நகர்த்தி வருகிறதாம். ஏற்கெனவே, முதலமைச்சர் வேட்பாளர் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பன்னீரை ஏமாற்றி அழைத்துவந்து, காரியத்தை சாதித்ததை போன்று மீண்டும் நடக்கலாம்.

அதிமுக ஆலோசனை கூட்டம்

தொண்டர்கள் கூடித்தான் பொதுச் செயலாளர் பதவிக்கு ஒருவரைத் தேர்வுசெய்ய முடியும் என்கிறார் பன்னீர். பொதுக்குழு உறுப்பினர்களும் தொண்டர்கள்தான் என்பதால், அவர்களை வைத்தே பொதுக்குழுவில் முடிவதற்குள் ஒற்றைத் தலைமைக் குறித்த முடிவை எட்டிவிட எடப்பாடி தரப்பு மெனக்கெடுகிறது.

பொதுச்செயலாளர் பதவியைத் திரும்ப எடுப்பது ஒன்றும் குதிரைக் கொம்பல்ல, முன்பு கட்சி சட்ட விதிகளைத் திருத்தியதுபோல, இப்போதும் விதிகளைத் திருத்தி எளிதாக பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டுவந்துவிடலாம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒற்றை ஓட்டு முறையில் தேர்தல் நடந்து மீண்டும் இருவரும் தேர்வுசெய்யப்பட்டபோதும், கடந்தாண்டு செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் ஒன்றை துருப்புச் சீட்டாக எடப்பாடி தரப்பு வைத்துள்ளது. அதாவது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அவர்கள் இருவர் நினைத்தாலும், பொதுக்குழுவே நினைத்தாலும் நீக்க முடியாது என்பதுதான் அந்தத் தீர்மானம். அதனை லாவகமாக செயற்குழுவில் மட்டுமே நிறைவேற்றினார்கள். அடுத்தப் பொதுக்குழுவில் அதற்கு ஒப்புதல் பெற்றுக்கொள்ளலாம் என்று எடப்பாடித் தரப்பு சொல்லிவிட்டதால், அத்தீர்மானம் அப்படியே கிடக்கிறது.

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கானத் தேர்தலுக்கும் பொதுக்குழு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதால் இதையும், மேற்கண்ட தீர்மானத்தையும் நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெற பன்னீர் தரப்புக் காய்நகர்த்துகிறது. ஆனால், எடப்பாடி அதற்கு ஒப்புக்கொள்ளாததால், அனேகமாக அந்த இரண்டு ஒப்புதல்களும் இப்பொதுக்குழுவில் இடம்பெற வாய்ப்பில்லை. இதன்மூலம், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு நடந்த தேர்தலும் ஒப்புதல் பெறாததால் காலாவதியாகிவிடும், செயற்குழு தீர்மானமும் அப்படியே நீர்த்துப்போய்விடும். இந்த இரண்டும் இல்லையென்றால், எளிதாகக் கட்சி சட்ட விதிகளைத் திருத்த பொதுக்குழுவிலேயே எடப்பாடித் தரப்பு ஒப்புதல் பெற்றுவிடும். அதன்படி, மீண்டும் சட்ட விதிகளைத் திருத்தி, ஒற்றைத் தலைமையாக எடப்பாடி அமரவும் வாய்ப்புகள் இருக்கிறது!” என்று முடித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.