அறவழியில் போராட வேண்டும்: இளைஞர்களுக்கு சோனியா ஆதரவு!

இந்திய முப்படைகளில் நான்கு ஆண்டுகள் மட்டும் தற்காலிக பணி வழங்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் முற்றி பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளை கற்களால் தாக்கியும், தீக்கிரையாக்கியும் வருகின்றனர்.

போராட்டங்கள் காரணமாக, நாடு முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 13 ரயில்களின் பயண தூரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. போராட்டம் பரவுவதை தடுக்கும் வகையில், பீகாரில் 18 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியை அடுத்துள்ள குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹரியானாவிலும் இணைய சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன

போராட்டத்தில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோரை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளனர். பொது சொத்துக்களை தடியால் அடித்தும், கல்லெறிந்தும் சேதப்படுத்திய குற்றத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். தெலங்கானாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 24 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பீகாரில் போராட்டக்காரர்கள் அம்மாநில துணை முதலமைச்சர் ரேணு தேவி வீட்டில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அங்கே இரண்டு மாநில பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு
காங்கிரஸ்
கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனியா காந்தி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இளைஞர்கள் குரலை புறக்கணித்து புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருப்பது அதிருப்தி அளிக்கிறது. அக்னிபத் திட்டம் இலக்குகள் அற்றது. இந்த திட்டம் குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இளைஞர்களின் நலனை காக்க காங்கிரஸ் உறுதியுடன் துணைநிற்கும். உண்மையான தேசபக்தர்களாக நாம், வன்முறை இன்றி அறவழியில் நமது எதிர்ப்பை காட்டுவோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.