அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்னை வலுத்து வரும் நிலையில், மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரனை, ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை நடத்துவது தொடா்பாக, ஆலோசனைக் கூட்டம் செவ்வாய் கிழமை (ஜூன்;14) நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள், தலைமை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது, அதிமுக அலுவலகத்துக்கு வெளியில் திரண்டிருந்த தொண்டர்கள் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டனா்.
அப்போதிருந்து கட்சியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ்.க்கு ஆதரவாக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டி, தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இப்படி ஒரு சூழலில், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என இருவரையும் அவரது இல்லங்களில் பல்வேறு தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரனை, வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துப் பேசினார். சென்னை அசோக் பில்லரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டில் 45 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தொடர்ந்து, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்
இதனிடையே, திருவண்ணாமலையில் இருந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி, வெள்ளிக்கிழமை மாலை வந்து சேர்ந்தார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், அன்பழகன், சிவி சண்முகம் , தங்கமணி, விஜய பாஸ்கர், காமராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேபி கந்தன், அதிமுக சென்னை மாவட்ட செயலாளர்களான பாலகங்கா, ராஜேஷ், தி. நகர் சத்யா, ஆதி ராஜாராம், வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பு குறித்து, அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி கூறுகையில், ”எந்த முடிவு எடுத்தாலும் ஒற்றுமையாக எடுக்கும்படி இரு தலைவர்களையும் சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். இரு தலைவர்களுக்கும் என் ஆதரவு உண்டு” என்று கூறினார்.
இப்படி இரு தரப்பினரும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இன்று நடைபெற உள்ள தீர்மானக் குழு கூட்டத்தில் இரு தரப்பினரும் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையே, பிரபல நட்சத்திர விடுதியில், காலை 10 மணிக்கு ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்துகிறார். அதேநேரம் ஈ.பி.எஸ். தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“