இந்திய நிகழ்வுகள்
முதல்வரின் சகோதரர் வீட்டில் ‘ரெய்டு’; ராஜஸ்தானில் சி.பி.ஐ., அதிரடி
புதுடில்லி-ராஜஸ்தான் முதல்வரின் சகோதரர் வீட்டில் சி.பி.ஐ., நடத்திய சோதனைக்கு, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குறைந்த விலை
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசென் கெலாட் மீது, 2007 – 09ல் விவசாயிகளுக்கான மானிய விலை உரத்தை குறைந்த விலைக்கு வாங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக சுங்கத்துறை, அவருக்கு 7 கோடி ரூபாய் அபராதம் விதித்து உள்ளது. இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ.,யும், இந்த விவகாரத்தில் நடந்த சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத் துறையும் விசாரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள அக்ராசென் வீடு, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அக்ராசென்னுக்கு சொந்தமான ௧௬ இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.கெலாட் சகோதரர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
சோதனை
ராகுலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதை கண்டித்து, டில்லியில் கடந்த மூன்று நாட்கள் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர் அசோக் கெலாட். அவரை பழிவாங்கும் நோக்கில், அவரது தம்பி வீட்டில், சி.பி.ஐ.,யை பயன்படுத்தி, மத்திய அரசு சோதனை நடத்திஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆம் ஆத்மி அமைச்சர் மீதான வழக்குஅமலாக்கத்துறை மீண்டும் சோதனை
புதுடில்லி-ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீதான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறையினர் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர். புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
வழக்கு பதிவு
இங்கு கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் சத்யேந்தர் ஜெயின், 57. இவர் 2015 – 16ல் அரசு அதிகாரியாக பணியாற்றியபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2017ல் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் 2018ல் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, சத்யேந்தர் ஜெயினின் குடும்பத்தினர் பெயரில் இருந்த 4.81 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, அமலாக்கத் துறை கடந்த ஏப்ரலில் பறிமுதல் செய்தது.இந்நிலையில், மே 30ல் சத்யேந்தர் ஜெயின் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
ரூ.2.82 கோடி
கடந்த ௬ம் தேதி, புதுடில்லியில் உள்ள அவரது வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி, 2.82 கோடி ரூபாய் ரொக்கம், 133 தங்க நாணயங்கள் உட்பட 1.80 கிலோ தங்கம் ஆகியவற்றை கைப்பற்றியது. இதற்கிடையே, சத்யேந்தர் ஜெயின் ‘ஜாமின்’ கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, டில்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்து உள்ளது. இந்நிலையில், சத்யேந்தர் ஜெயினின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத்துறையினர் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர்.
தமிழக நிகழ்வுகள்
ரூ 1 கோடி மோசடி செய்த இளம் பெண் கைது
சென்னை, :வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக, 1 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், இளம்பெண் கைது செய்யப்பட்டார்.சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ஏஞ்சல், 23. இவர், தன் நண்பர்களுடன் சேர்ந்து, போலியாக வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.இதன் வாயிலாக, படித்த இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக, நேரடியாகவும், வங்கி வாயிலாகவும், 1 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார்.இதுகுறித்து, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று ஏஞ்சலை பிடித்து விசாரித்தனர். அவர், குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இவரது பின்னணியில் மிகப்பெரிய மோசடி கும்பல் இருப்பது தெரிந்துள்ளது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த பெயின்டர் தற்கொலை
மணலி, :’ஆன்லைன் ரம்மி’ விளையாட்டால் ஏற்பட்ட நஷ்டத்தில் மனமுடைந்து, பெயின்டிங் கான்ட்ராக்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை மணலி, அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன், 37, பெயின்டிங் கான்ட்ராக்டர். இவர் மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு பிரணவ், 8, பிரதீப், 8, ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.நாகராஜன் கடந்த சில மாதங்களாக, ஆன்லைன் ரம்மி விளையாட்டில், பெருமளவில் பணத்தை இழந்துள்ளார்.
மேலும், உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கியும், மனைவியின் நகையை அடகு வைத்தும், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்து உள்ளார். ஆன்லைன் விளையாட்டால் பெரும் நஷ்டம் ஏற்படவே, கணவன் – மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. உறவினர்களும் நாகராஜை கண்டித்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு, மனைவி, பிள்ளைகளுடன் வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு, படுக்கை அறையில் உறங்கச் சென்றுள்ளார். நேற்று காலை, வரலட்சுமி எழுந்து பார்த்த போது, வீட்டின் வரவேற்பறையில், நாகராஜன் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் கூச்சலிட்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நாகராஜை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர், நாகராஜன் இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து, மணலி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இறப்பதற்கு முன், நாகராஜன் எழுதிய கடிதத்தில், ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும், தன் சாவிற்கு யாரும் காரணம் இல்லையெனவும் எழுதி வைத்துள்ளதாக போலீசார் கூறினார்.ஆன்லைன் ரம்மி விளையாட்டால், கடந்த சில தினங்களுக்கு முன், மணலிபுதுநகரைச் சேர்ந்த பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டல்’ஸ்பா’க்களில் போலீஸ் விசாரணை
புதுச்சேரி,-அழகு நிலையங்களில், ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டல் விடுக்கின்றனரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
புதுச்சேரி, சங்கரதாஸ் வீதியில் உள்ள அழகு நிலையத்திற்குள், கடந்த 6ம் தேதி 7 பேர் கொண்ட ரவுடி கும்பல் புகுந்து மாமூல் கேட்டு மிரட்டினர். பின், அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் கத்தியை காட்டி அவர்கள் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது.இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, லாஸ்பேட்டையை சேர்ந்த விக்கி, கிருஷ்ணகுமார், விஷ்வா, விஜய் மற்றும் பாலமுருகன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும், நாவற்குளம் வெற்றி, ரெயின்போ நகர் சத்தியா (எ) சிவபெருமாள் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
இதில், தலைமறைவாக உள்ள சத்தியா பிரபல ரவுடி, என்பதால், இதேபோன்று மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இயங்கி வரும் அழகு நிலையங்களில் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளாரா என விசாரிக்க எஸ்.பி., வம்சித ரெட்டி உத்தரவிட்டார்.அதன்பேரில் சிறப்பு படை இன்ஸ்பெக்டர் ரமேஷ், பெரியக்கடை இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று புதுச்சேரி தியாகு முதலியார் வீதி, வெள்ளாழர் வீதி மற்றும் அரவிந்தர் வீதிகளில் உள்ள அழகு நிலையங்களில், 7 பேரின் புகைப்படங்களை காட்டி, மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்தனரா என விசாரணை மேற்கொண்டனர்.
மாயமான நபர் சாவு போலீஸ் விசாரணை
திட்டக்குடி-திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரம், பாட்டை தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் கண்ணன், 49. இவர் கடந்த 15ம் தேதி முதல் காணவில்லை. உறவினர்கள் இவரைத் தேடி வந்த நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு கண்ணன் வெள்ளாற்றில் இறந்து கிடந்ததைப் பார்த்த சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
கண்ணனின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்து சில நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
நண்பருக்கு வெட்டு: இருவருக்கு வலை
கடலுார்,-முன்விரோதம் காரணமாக நண்பரை கத்தியால் வெட்டிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் பார்த்திபன், 24. இவரது நண்பர்கள் முதுநகர் திவாகர், ரவின். இவர்கள், கடந்த மாதம் முதுநகரில் நடந்த நண்பர் பிறந்த நாள் விருந்தில் கலந்து கொண்டனர்.
மது விருந்தில் பார்த்திபனுக்கு போதை அதிகமனதால் மணிகூண்டு அருகில் படுத்து துாங்கினார். எழுந்து பார்த்த போது தனது மொபைல் போன் காணாமல் போனது தெரிய வந்தது. இதில், பார்த்திபன் தனது நண்பர்களிடம் மொபைல் போனை திவாகர், ரவின் ஆகியோர் எடுத்ததாக கூறினார். ஆத்திரமடைந்த திவாகர், ரவின் நேற்று முன்தினம் பார்ததிபனிடம், நீ எப்படி மொபைல்போன் எடுத்தோம் என கூறினாய் என கேட்டதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த திவாகர், ரவின் ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தி, உருட்டுக்கட்டையால், பார்த்திபனை தாக்கினர். படுகாயமடைந்த அவரை, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் திவாகர், ரவின் மீது கடலுார் புதுநகர் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.