ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில், குருத்வாரா அருகே இன்று காலை மர்ம நடப்பார்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காபூலின் கர்தே பர்வான் பகுதியில் உள்ள குருத்வாரா அருகே நடந்த இந்த தாக்குதலில் குருத்வாராவின் காவலர் உட்பட இருவர் இறந்திருப்பதாகவும், மேலும் பலர் இறந்திருக்கக்கூடும் கூறப்படுகிறது. இருப்பினும் பலி எண்ணிக்கை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. மேலும், இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இச்சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தானின் டோலோ நியூஸ் நிறுவனமானது, “காபூல் நகரின் கர்டே பர்வான் பகுதியில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இந்த சம்பவத்தின் தன்மை மற்றும் உயிரிழப்புகள் பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை” என ட்வீட் செய்துள்ளது.
இத்தகைய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “குருத்வாரா கார்டே பர்வான் மீதான கோழைத்தனமான இந்த தாக்குதலை அனைவரும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்” என ட்வீட் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரான பாக்சி, “குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாகும் செய்திகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல், நிலைமையை உன்னிப்பாக நாங்கள் கண்காணித்து வருகிறோம்” கூறியுள்ளார்.