இளைஞர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அமைதியான, அகிம்சை வழிகளில் போராட வேண்டும்! சோனியா காந்தி

டெல்லி: இளைஞர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அமைதியான, அகிம்சை வழிகளில் போராட வேண்டும்,  இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மத்தியஅரசு அறிமுகப்படுத்தி உள்ள அக்னிபாத் எனப்படும் ஒப்பந்த முறையில் 4ஆண்டுகள் ராணுவபணிக்கான திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் முற்றி பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் ஏராளமான ரயில் பெட்டிகளை தீக்கிரையாக்கி உள்ளதுடன்,  பொதுச் சொத்துகளை சேதப்படுத்தி வருகின்றன. போராட்டம் பரவுவதை தடுக்கும் வகையில், பீகாரில் 18 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியை அடுத்துள்ள குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரியானாவிலும் இணைய சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. போராட்டங்களை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை, துணை ராணுவப்படை களமிறக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அங்கே இரண்டு மாநில பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோரை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளனர்.  தெலங்கானாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 24 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பீகாரில் போராட்டக்காரர்கள் அம்மாநில துணை முதலமைச்சர் ரேணு தேவி வீட்டில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி,  இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் பிந்தைய பாதிப்பான மூச்சுத்திணறல் காரணமாக, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சோனியா காந்தி அக்னிபாத்துக்கு எதிரான இளைஞர்கள் போராட்டம் குறித்து ஏஐசிசி பொதுச் செயலாளர் தகவல் தொடர்பு ஜெய்ராம் ரமேஷ் மூலம்  அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

“நியாயமான கோரிக்கைகள்” என்று கூறியதற்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறு இளைஞர்களுக்கு வேண்டுகோள்  விடுத்துள்ளார். அக்னிபத் திட்டம் இலக்குகள் அற்றது. இத்திட்டத்தை எதிர்ப்பதாக உறுதியளித்த சோனியா காந்தி,  இளைஞர்களை வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

“காங்கிரஸ் உங்களுடன் முழு பலத்துடன் நிற்கிறது மற்றும் உங்கள் நலன்களுக்காகவும் இந்தத் திட்டத்தை திரும்பப் பெறுவதற்காகவும் போராடுவதாக உறுதியளிக்கிறது. உண்மையான தேசபக்தர்களைப் போலவே, சத்தியம், அகிம்சை, பின்னடைவு மற்றும் அமைதியின் பாதையைப் பின்பற்றி உங்கள் குரலை வெளிப்படுத்துவோம்”.

இந்திய ராணுவத்தில் சேர்வதன் மூலம் தேசிய சேவையின் குறிப்பிடத்தக்க பணிக்காக நீங்கள் விரும்புகிறீர்கள். ராணுவத்தில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருந்தும், ஆட்சேர்ப்பில் மூன்று ஆண்டுகள் தாமதம் ஆனதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. விமானப்படையில் சேர்க்கைக்கான சோதனையை எடுத்து முடிவு மற்றும் சந்திப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுடன் நான் அனுதாபப்படுகிறேன்.

இளைஞர்கள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் கவலைகளைப் புறக்கணித்து புதிய “திசையற்ற” ஆயுதப்படை ஆள்சேர்ப்பு கொள்கையை அரசாங்கம் அறிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.

உங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான மற்றும் வன்முறையற்ற வழிகளைப் பயன்படுத்தி போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்திய தேசிய காங்கிரஸ் உங்களுடன் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஜந்தர் மந்தரில் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.