எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் விநியோகத்தில் இருந்து விலகுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தடையின்றி எரிபொருளை விடுவிப்பதால் நீண்ட வரிசையில் நிற்பவர்கள் ஆத்திரமடைந்து கலவரமாக நடந்து கொள்வதாக சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிலை நீடித்தால் நிரப்பு நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு
இதேவேளை, தற்போது கிடைத்துள்ள மற்றும் அடுத்த சில நாட்களுக்குள் பெறப்படவுள்ள எரிபொருள் கையிருப்புக்களை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முறையாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
நிதி அமைச்சும் மத்திய வங்கியும் அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து போதியளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக கடன் கடிதங்களை வழங்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகத்தில் பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பயன்படுத்தி, தனியார் மற்றும் சுற்றுலா பேரூந்துகள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மூலம் தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்கவும், இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டது.