கொழும்பு:நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரி பொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது.
பெட்ரோல், டீசல் வாங்க, மக்கள் இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு எரிபொருள் விநியோகிக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நிலுவை உள்ளது. அதனால் எண்ணெய் நிறுவனங்கள் இலங்கைக்கு பெட்ரோல், டீசல் சப்ளை செய்ய தயங்குகின்றன.இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது.
இதையடுத்து, எரிபொருள் பயன்பாட்டை குறைக்க, ‘அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் ஆகியவற்றுக்கு வெள்ளி தோறும் விடுமுறை விடப்படும்’ என, இலங்கை அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று தலைநகர் கொழும்பில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் இயங்காததால், வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்ய மேலும், 3,750 கோடி கடன் கேட்க உள்ளதாக இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் பசில்
இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே நேற்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பசில் ராஜபக்சே, கடந்த வாரம் தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.
Advertisement