சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் இன்றும் (ஜூன் 18) தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக பொதுக்குழுக் கூட்டம் குறித்து கடந்த 14-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் இந்த கருத்தை வலியுறுத்திப் பேசியதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடையத் தொடங்கியது.
இந்த விவகாரம் தொடர்பாக 5-வது நாளாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், சேலத்தில் இருந்து சென்னை திரும்பிய கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்: இதனிடையே ஆதரவாளர்களுடன் ஆலோசனையை முடித்து கிரீன்வேஸ் சாலையில் இருந்து புறப்பட்டு, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்துள்ளார். கட்சி அலுவலகத்தில் காத்திருந்த அவரது ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். பொதுக்குழு தீர்மானக்குழுவுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தவுள்ளார்.
முன்னதாக, கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.